டெங்கு காய்ச்சலால் பாதித்த 73 பேருக்கு சிகிச்சை சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்


டெங்கு காய்ச்சலால் பாதித்த 73 பேருக்கு சிகிச்சை சென்னை மாநகராட்சி கமிஷனர் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2019 3:45 AM IST (Updated: 16 Oct 2019 1:06 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சலால் பாதித்த 73 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்தார்.

சென்னை,

சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறை சார்பில் பருவமழை காலங்களில் மேற்கொள்ளப்படும் காய்ச்சல் தடுப்பு, கொசு ஒழிப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பேசியதாவது:-

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோய் பரவாமல் இருக்க நோய் பாதித்த பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் கொசுப்புழு வளர ஏதுவான திறந்த நிலையிலுள்ள இடங்களை கண்டறிந்து அவற்றில் டெங்கு கொசுப்புழு வளராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கொசுப்புழு வளரும் இடங்களை கண்டறிந்து அந்த கட்டிடத்தின் உரிமையாளர்களுக்கு இதுவரை அபராத தொகையாக ரூ.38 லட்சத்து 96 ஆயிரத்து 600 விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 387 அரசு மற்றும் மாநகராட்சி மருத்துவமனைகள் மற்றும் 652 தனியார் மருத்துவமனைகளில் ஆய்வு செய்து கொசுப்புழு வளராமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிக்குட்பட்ட இடங்களில் இதுவரை 25,334 காலிமனையிடங்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அங்கு தேங்கியுள்ள உபயோகமற்ற பொருட்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. 1,326 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு அதில் காய்ச்சலால் பாதித்த 763 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகம், ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் பொது இடங்களில் இலவசமாக நிலவேம்பு கசாயம் நாள்தோறும் மாநகராட்சி மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அக்டோபர் மாதத்தில் 73 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு நலமாக உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story