மாவட்ட செய்திகள்

பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை + "||" + In perumpakkam youth for 2 friends murdered

பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை

பெரும்பாக்கத்தில் பயங்கரம் நண்பர்கள் 2 பேர் படுகொலை 6 பேரிடம் விசாரணை
பெரும்பாக்கத்தில் நண்பர்கள் 2 பேர் குத்திக்கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக 6 பேரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 28), ஆட்டோ டிரைவர். பெரும்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ஆனந்த் (29), லாரி கிளனர். நண்பர்களான இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பெரும்பாக்கத்தில் உள்ள மதுபான கடைக்கு சென்றனர்.


அங்கு மதுபான பாரில் மதுபானங்களை வாங்கிக்கொண்டு சற்று தூரத்தில் ஆட்டோவில் அமர்ந்து இருவரும் மது அருந்தினார்கள். அப்போது அங்கு வந்த 6 பேர் கொண்ட கும்பல் திடீரென ஸ்டீபன், ஆனந்த் இருவரையும் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பிச்சென்றுவிட்டது.

இதில் கழுத்து, மார்பு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் அடைந்த இருவரும் உயிருக்கு போராடியபடி கிடந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் ஸ்டீபன், அதே இடத்தில் பரிதாபமாக இறந்து கிடந்தார்.

உயிருக்கு போராடிய ஆனந்தை மீட்டு 108 அம்புலன்சில் ஏற்றி குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆனந்தும் உயிரிழந்தார்.

இந்த இரட்டைக்கொலை தொடர்பாக பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுபான பாரில் இரவு நேரத்தில் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பதில் ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது பெண்கள் தகராறு காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

முன்னதாக மதுக்கடைக்கு வரும்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை, இவர்கள் உள்பட சில ஆட்டோ டிரைவர்கள் கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த தகராறில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் தங்கள் கூட்டாளிகளுடன் வந்து 2 பேரையும் கொலை செய்தனரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கொலையாளிகள் பிடிபட்டால் மட்டுமே இருவரது கொலைக்கான உண்மையான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த கொலை தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 6 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.