தேசிய அஞ்சல் வார நிறைவு விழாவில் பழங்கால ‘ரன்னர்’ முறை சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு


தேசிய அஞ்சல் வார நிறைவு விழாவில் பழங்கால ‘ரன்னர்’ முறை சிறப்பு அஞ்சல் உறை வெளியீடு
x
தினத்தந்தி 15 Oct 2019 10:45 PM GMT (Updated: 15 Oct 2019 8:22 PM GMT)

தேசிய அஞ்சல் வார நிறைவு விழாவில் பழங்கால ‘ரன்னர்’ முறை சிறப்பு அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.

திருச்சி,

தேசிய அஞ்சல் வார நிறைவு விழாவை முன்னிட்டு, திருச்சியில் அஞ்சல் செயல்பாடுகளை குறிக்கும் வண்ணம் பழங்கால ரன்னர் முறை சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டு, அதை ரன்னர் பர்கத்பாஷா மூலம் தலைமை தபால் அலுவலகத்திலிருந்து தெப்பக்குளம் தபால் அலுவலகம் வரை கொண்டு சேர்க்கும் சிறப்பு அஞ்சல் உறை வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் அஞ்சல் உறையை வெளியிட, அதை திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் மீனா பெற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் ரன்னரிடம் (தபால்காரரிடம் ) தபால்கள் அடங்கிய பையை வழங்கினார். தபால் தலை மற்றும் கையெழுத்து சங்க நிறுவனத் தலைவர் விஜயகுமார், முதுநிலை கோட்ட அஞ்சல் பிரிப்பு கண்காணிப்பாளர் ரவீந்திரன், இந்திரா கணேசன் கல்விக் குழும இயக்குனர் பாலகிருஷ்ணன், அஞ்சல்தலை சேகரிப்பு மைய அலுவலர் ராஜேஷ் ரகுபதி, அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் மதன், யோகா ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

விழாவில் மத்திய மண்டல அஞ்சல் துறை இயக்குனர் தாமஸ் லூர்துராஜ் கூறியதாவது:-

மெயில்

தபால் அல்லது அஞ்சல் என்பதைக் குறிக்க நாம் பயன்படுத்தும் போஸ்ட் என்ற சொல் இடம் என்பதைக் குறிக்கும் பொஸிஷியோ என்ற லத்தீன் வார்த்தை வழி வந்ததாகும். இன்று தபால்களை சேகரிப்பது, பிரிப்பது, எடுத்துச்செல்வது, உரியவர்களிடம் சேர்ப்பது என்று பலவகை பணிகளில் ஈடுபட்டிருக்கும் நவீன அஞ்சலக சேவையோடு ஒப்பிடும்போது இந்த பெயர் மிகவும் பழமையானதாக தோன்றலாம்.

உண்மையாக போஸ்ட் என்ற சொல் 15-ம் நூற்றாண்டில் நடைமுறைக்கு வந்த புதிய அஞ்சல் சேவைக்கே முற்றிலும் பொருந்தும். போஸ்ட் என்ற சொல்லை முதன் முதலாக 13-ம் நூற்றாண்டில் பயன்படுத்தியவர் மூன்றாம் போப்ஹனோரியஸ் ஆவார். 18-ம் நூற்றாண்டில் கடிதங்களை போட்டு எடுத்துச்செல்ல பயன்படுத்தப்பட்ட மேல் என்ற தோல்பையை குறிக்கும். ஜெர்மன் சொல்லிலிருந்து வந்தது மெயில் என்கிற வார்த்தை ஆகும்.

எளிதான செயல் அல்ல

அஞ்சலகத்தை பொறுத்தவரை உடன் முதன்மைப் பணியாக விரைவாக முறையாகவும் பத்திரமாகவும் கடிதங்களை வேறு இடங்களுக்கு அனுப்பி உரிய முகவரியுடன் கொண்டு சேர்ப்பது அஞ்சல் செயல்பாடுகள் ‘மெயில் ஆபரேஷன்ஸ்’ ஆகும். இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டில் கால நிலை மாறுபாடுகளும் நல்ல சாலைகளும் போதுமான போக்குவரத்து வசதிகளும் இல்லாத நிலையில் எளிதான செயல் அல்ல.

தொடக்க காலத்தில் போக்குவரத்து வசதி என்பது மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகள், ஒட்டகம் மற்றும் நீர்வழிப் பாதை வழியாக செல்லும் படகுகள் என அஞ்சல் செயல்பாடுகள் இருந்தது. அஞ்சலக ஊழியர்கள் மற்றும் வண்டிகளை கொண்டு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.

இப்படி கொண்டு செல்கிற போது கொட்டும் மழை போன்ற இயற்கை சீற்றம், கள்வர்கள் தொல்லை இவற்றை எதிர்கொள்ள வேண்டிய தாயிற்று. இதன் காரணமாக கடிதங்கள் மெதுவாகவே உரியவர்களுக்கு போய் சேர்ந்தன. காலப்போக்கில் கடிதப் போக்குவரத்து வளர்ந்தது. ரன்னர், மாட்டு வண்டி, குதிரை வண்டி, ஒட்டகம், ெரயில்வே அஞ்சலகம், கப்பல், மோட்டார் வாகனம், விமான சேவை மூலமாக அஞ்சல் செயல்பாடுகள் நடைபெற்றன.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story