ஈரோட்டில் உரம் தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி துப்புரவு பணியாளரின் கை துண்டானது


ஈரோட்டில் உரம் தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி துப்புரவு பணியாளரின் கை துண்டானது
x
தினத்தந்தி 16 Oct 2019 4:45 AM IST (Updated: 16 Oct 2019 2:16 AM IST)
t-max-icont-min-icon

ஈரோட்டில் உரம் தயாரிக்கும் எந்திரத்தில் சிக்கி துப்புரவு பணியாளரின் கை துண்டானது.

ஈரோடு,

ஈரோடு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் மக்கும் குப்பைகள் பிரிக்கப்பட்டு மைக்ரோ கம்போஸ்டிங் முறையில் உரமாக தயாரிக்கப்படுகிறது. மேலும், மக்காத குப்பைகள் பயோ மைனிங் முறையில் அழிக்கப்படுகிறது. இதற்காக வைராபாளையம் பகுதியில் எந்திரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மக்கும் குப்பைகள் எந்திரம் மூலமாக சிறு, சிறு துண்டுகளாக்கி மட்க வைக்கப்படுகிறது.

இந்தநிலையில் மட்கும் குப்பைகளை உரமாக்கும் திட்டத்தில் துப்புரவு பணியாளர்கள் நேற்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதில் ஈரோடு மாநகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளரான ஈரோடு நாராயணவலசு திருமால்நகரை சேர்ந்த விஜயன் (வயது 37) என்பவர் குப்பைகளை சிறு துண்டுகளாக நறுக்கும் எந்திரத்தில் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அவர் எந்திரத்துக்குள் குப்பைகளை தள்ளிவிடும் பணியை செய்துகொண்டு இருந்தார். அப்போது விஜயனின் வலது கை எதிர்பாராதவிதமாக எந்திரத்தில் சிக்கியது. இதில் அவருடைய வலது கை துண்டானது. மேலும், கையில் இருந்து ரத்தம் பீறிட்டு வெளியேறியது. வலி தாங்க முடியாமல் விஜயன் அலறினார்.

உடனடியாக அங்கு வேலை பார்த்து கொண்டிருந்த சக பணியாளர்கள் விரைந்து வந்து எந்திரத்தை நிறுத்தினார்கள். அதற்குள் துண்டானா விஜயனின் கை எந்திரத்தில் சிக்கி துண்டு, துண்டாக ஆனது.

படுகாயம் அடைந்த விஜயனை பணியாளர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு விஜயனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதுகுறித்து ஈரோடு கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னதாக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் விஜயன் சிகிச்சை பெற்றபோது அவரை பார்ப்பதற்காக துப்புரவு பணியாளர்கள் பலர் திரண்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், “மாநகராட்சி சார்பில் உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும் துப்புரவு பணியாளர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படுவதில்லை. பாதுகாப்பு உபகரணங்களும் கொடுக்கப்படவில்லை. கையை இழந்த விஜயனுக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். எனவே அவருடைய சிகிச்சை செலவை மாநகராட்சி நிர்வாகம் முழுமையாக ஏற்க வேண்டும். மேலும், அவர் குணமடையும் வரை சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளித்து, பணி நிரந்தரம் செய்யவும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்”, என்றனர்.

Next Story