பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் - தேனி மகளிர் கோர்ட்டு உத்தரவு
பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று கலெக்டருக்கு, தேனி மகளிர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
தேனி,
தேனி பழைய அரசு மருத்துவமனை சாலையை சேர்ந்தவர் செல்லத்துரை (வயது 62). இவர், கடந்த 2017-ம் ஆண்டு, தெருவில் விளையாடிய 7 வயது சிறுமியை மிட்டாய் வாங்கிக் கொடுப்பதாக கூறி தனது வீட்டுக்குள் அழைத்து சென்றார். பின்னர் அங்கு அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதுகுறித்து சிறுமியின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் செல்லத்துரையை தேனி போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, தேனி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் செல்லத்துரைக்கு ஆயுள்தண்டனை விதித்து கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்பேரில் செல்லத்துரை மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பான மனு மீதான விசாரணை, மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கீதா, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.7 லட்சம் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேனி மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டார்.
இந்த நிவாரணத்தில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரத்தை சிறுமியின் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி நிரந்தர வைப்புத் தொகையாக செலுத்தவும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்தை சிறுமியின் படிப்பு செலவுக்கு வழங்கவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த நிவாரணத்தை ஒரு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story