விபத்து நஷ்டஈடு வழங்காததால் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி


விபத்து நஷ்டஈடு வழங்காததால் கலெக்டர் அலுவலக பொருட்களை ஜப்தி செய்ய முயற்சி
x
தினத்தந்தி 16 Oct 2019 4:00 AM IST (Updated: 16 Oct 2019 2:52 AM IST)
t-max-icont-min-icon

விபத்து நஷ்டஈடு வழங்காததால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொருட்களை ஜப்தி செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம், 

மேட்டூர் அருகே உள்ள ஓலப்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மகேஸ்வரி. கடந்த 2008-ம் ஆண்டு மே மாதம் சுரேஷ், நிறைமாத கர்ப்பிணியான தனது மனைவியை மொபட்டில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

மேச்சேரி மெயின்ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி அவருடைய மொபட் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் மகேஸ்வரி சம்பவ இடத்திலேயே இறந்தார். சுரேசின் வலது கால் நசுங்கியது. படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதனிடையே விபத்தில் பாதிக்கப்பட்ட சுரேஷ் நஷ்டஈடு கேட்டு சேலம் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட சுரேசுக்கு ரூ.13½ லட்சம் நஷ்டஈடு வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து காப்பீட்டு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழக அரசு ரூ.23½ லட்சமும், காப்பீட்டு நிறுவனம் ரூ.13½ லட்சமும் வழங்க உத்தரவிட்டது. இந்த தொகையை அரசு வழங்காததால் சுரேஷ் தரப்பில் சேலம் மாவட்ட சிறப்பு கோர்ட்டில் நிறைவேற்றும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, நஷ்டஈடு வழங்காததால் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில் சுரேஷ், வக்கீல் செந்தில்நாத் மற்றும் அமீனா மணிகண்டன் ஆகியோர் நேற்று சேலம் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் நீதிபதி பிறப்பித்த உத்தரவை அங்கிருந்த அதிகாரிகளிடம் காண்பித்து பொருட்களை ஜப்தி செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அவர்களிடம் அங்கிருந்த மாவட்ட மேலாளர் சண்முகவள்ளி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர், இதுகுறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ஒரு மாதத்திற்குள் பாதிக்கப்பட்டவருக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர்களிடம் கூறினார். இதையடுத்து பொருட்களை ஜப்தி செய்யாமல் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.

Next Story