எடப்பாடி பகுதியில் பலத்த மழை: வெங்கடேச பெருமாள் கோவில் மண்டப சுவர் இடிந்து விழுந்தது
எடப்பாடி பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக இருப்பாளியில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் மண்டப சுவர் இடிந்து விழுந்தது. மேலும் மின்னல் தாக்கி மாடு செத்தது.
எடப்பாடி,
எடப்பாடியை அடுத்த இருப்பாளியில் பல நூற்றாண்டு பழமையான பாமா, ருக்குமணி வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதிலமடைந்து காணப்பட்டது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கோவிலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மழையின் காரணமாக வெங்கடேச பெருமாள் கோவில் மண்டபத்தின் வடக்கு பகுதி சுவர் இடிந்து விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் பாதிப்பு ஏற்பட வில்லை. எனவே கோவிலில் இடிந்த சுவரை சீரமைத்து தர வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பாளியை அடுத்த அத்தரப்பட்டியை சேர்ந்தவர் வரதராஜ். இவர் பசுமாடு வளர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ெபய்த பலத்த மழையின் காரணமாக வீட்டின் முன்பு கட்டியிருந்த பசு மாட்டை மின்னல் தாக்கியது. இதில் பசு மாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது.
இது குறித்து தகவல் அறிந்த கிராம நிர்வாக அலுவலர் முருகேசன், கால்நடை டாக்டர் சக்திவேல் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.
Related Tags :
Next Story