டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - கலெக்டர் தகவல்


டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் - கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 16 Oct 2019 4:15 AM IST (Updated: 16 Oct 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன என்று கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறினார்.

ஊட்டி,

ஊட்டியில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரத்துறை சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் பொது சுகாதாரம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா உள்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். அதன்பிறகு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க அனைத்து வகையான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் இதுவரை 6 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையின் மூலம் பூரண குணம் அடைந்து உள்ளனர். ஆனாலும் அனைத்து துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து சுற்றுப்புற சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, நோய் கண்காணிப்பு மற்றும் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தேவையற்ற பொருட்களில் தேங்கும் தண்ணீர் மற்றும் குப்பைகளை அவ்வப்போது அகற்றி கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்கப்பட்டு வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 ஆஸ்பத்திரிகள், 37 ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அங்கு கொசுப்புழு உற்பத்தியாகாமல் தடுக்க சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே டெங்கு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அதில் ஆர்வம் உள்ள 1,600 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, தூய்மை தூதுவர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கொசுப்புழு உற்பத்தியை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். தேவையான இடங்களில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நிலவேம்பு கசாயம் வினியோகிக்கப்படுகிறது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் தாங்களாக மருந்து, மாத்திரைகளை உட்கொள்ளாமல் ஆஸ்பத்திரி அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுக வேண்டும். டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடத்தப்படும். அதில் களப்பணி ஆய்வுகளில் கிடைத்த தகவல்களின்படி மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story