மைசூருவை இரண்டாக பிரித்து தேவராஜ் அர்ஸ் பெயரில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் - எச்.விஸ்வநாத் பேட்டி


மைசூருவை இரண்டாக பிரித்து தேவராஜ் அர்ஸ் பெயரில் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் - எச்.விஸ்வநாத் பேட்டி
x
தினத்தந்தி 15 Oct 2019 11:45 PM GMT (Updated: 15 Oct 2019 10:53 PM GMT)

மைசூருவை இரண்டாக பிரித்து தேவராஜ் அர்ஸ் பெயரில் புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத் கூறினார்.

மைசூரு, 

மைசூருவில் நேற்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.வான எச்.விஸ்வநாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மைசூரு மாவட்டத்தை இரண்டாக பிரிக்க வேண்டும். உன்சூரை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். அந்த புதிய மாவட்டத்தில் எச்.டி.கோட்டை, பிரியப்பட்டணா, கே.ஆர்.நகர், சரகூரு, சாலிகிராமம் உள்ளிட்ட பகுதிகளை கொண்டுவர வேண்டும். அப்பகுதி மக்களும் புதிய மாவட்டம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றுதான் எண்ணுகிறார்கள். இதுபற்றி நான் முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேசினேன். அதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா இனிவரும் நாட்களில் இதுபற்றி ஆலோசித்து முடிவு எடுப்பதாக கூறினார்.

மேலும் உன்சூர் தொகுதி வளர்ச்சி சம்பந்தமாகவும் முதல்-மந்திரியிடம் பேசி உள்ளேன். உன்சூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அரசியல் தலைவர்கள் பலர் கிண்டல் செய்திருக்கிறார்கள். அவர்களின் கருத்துகளை நான் வரவேற்கிறேன்.

சர்ச்சைக்குரிய வகையில் சிலர் கருத்துகள் தெரிவிப்பது சகஜம். ஆனால் நான் அந்த கருத்துகளை தேர்தல் வியூகமாக பயன்படுத்த மாட்டேன். மைசூரு மாவட்டத்தை பிரித்து தேவராஜ் அர்ஸ் பெயரில் புதிய மாவட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.

இதுதொடர்பாக சித்தராமையா, முன்னாள் மந்திரி சா.ரா.மகேஷ் உள்பட பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவர்களின் கருத்து எனக்கு எதிராக இருப்பது சகஜம்தான். புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டால் அதில் என்ன தவறு இருக்கிறது. அதன்மூலம் மக்கள் வளர்ச்சி அடைவார்கள். தொழில் வளம் பெருகும்.

என்னை ரூ.25 கோடிக்கு ஒருவர் விலைக்கு வாங்கிவிட்டதாக சா.ரா.மகேஷ் குற்றம்சாட்டுகிறார். அப்படியானால் என்னை வாங்கியவர் யாரோ அவரை சாமுண்டி மலைக்கு அழைத்து வந்து சாமுண்டீஸ்வரி அம்மன் முன்பு வைத்து சா.ரா.மகேஷ் நிரூபிக்கட்டும். இல்லையெனில் இனிமேல் அதுபற்றி அவர் பேசக்கூடாது.

முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வரின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனைக்கும், அரசியலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அதனால் அதை யாரும் அரசியலாக்க வேண்டாம். வருமான வரி சோதனை நடைபெறுவதை சுட்டிக்காட்டி பா.ஜனதாவுக்கு எதிராக காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபடுவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story