கவர்னருக்கு எதிரான போராட்டத்தை வாடிக்கையாக வைத்துள்ளனர் - ரங்கசாமி தாக்கு


கவர்னருக்கு எதிரான போராட்டத்தை வாடிக்கையாக வைத்துள்ளனர் - ரங்கசாமி தாக்கு
x
தினத்தந்தி 16 Oct 2019 5:00 AM IST (Updated: 16 Oct 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

கவர்னருக்கு எதிரான போராட்டத்தை வாடிக்கையாக வைத்துள்ளனர் என்று ரங்கசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் புவனேஸ்வரனை ஆதரித்து என்.ஆர்.காங்கிரஸ் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி ரெயின்போ நகரில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார். அப்போது அ.தி.மு.க. மாநில செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ., துணை செயலாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

அப்போது ரங்கசாமி நிருபர் களிடம் கூறியதாவது:-

எங்கள் வேட்பாளர் புவனேஸ்வரனுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. ஏனாம் சென்றுள்ள கவர்னர் கிரண்பெடியை ஆளுங்கட்சி எதிர்ப்பது புதிதல்ல. ஏற்கனவே கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார்கள்.

கவர்னருக்கான அதிகாரம் என்ன? அமைச்சரவைக்கான அதிகாரம் என்ன? என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆனால் கவர்னருக்கு எதிரான போராட்டம் என்பதையே வாடிக்கையாக வைத்துக்கொண்டு உள்ளனர். அதுபோன்ற போராட்டத்தின் ஒரு பகுதிதான் ஏனாமில் நடக்கும் கருப்புக்கொடி போராட்டமும்.

புதுவையில் யாருக்கு அதிகாரம் என்பது தொடர்பாக நீதிமன்றத்துக்கு சென்றனர். நீதிமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று கூறிவிட்டது. அதை வைத்துக்கொண்டு மக்களுக்கு செய்ய வேண்டியதுதானே.

எதையும் செய்ய முடியாததற்கு தேர்தல் நேரத்திலும் மற்ற நேரத்திலும் கவர்னரை கருவியாக இந்த அரசு பயன்படுத்துகிறது. 2015-ம் ஆண்டு மழையின்போதும் காமராஜ் நகர் தொகுதியில் நான் சுற்றிப்பார்த்து ஆய்வு மேற்கொண்டேன். அரசு மூலம் என்ன செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தேன்.

இவ்வாறு ரங்கசாமி கூறினார்.

அன்பழகன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

இலவச அரிசி திட்டத்தில் திரும்ப திரும்ப முன்னுக்குப்பின் முரணான தகவல்களையே முதல் அமைச்சர் கொடுத்து வருகிறார். ஐகோர்ட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று கூறிய பின்னர் கோப்பினை கவர்னருக்கு அனுப்ப வேண்டிய அவசியம் என்ன? சட்டமன்றத்தில் இலவச அரிசி வழங்க என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பாரதீய ஜனதா ஆதரவு அளித்த பின்னர் கோப்பினை ஏன் கவர்னருக்கு அனுப்பவேண்டும்.

அரிசிக்கு பதில் பணம் போடுகிறோம் என்று கூறும் முதல்-அமைச்சர் அரிசி போடாத 19 மாதத்துக்கு சேரவேண்டிய பணத்தை ஏன் வழங்கவில்லை. இந்த தொகுதியை என்.ஆர்.காங்கிரசுக்கு கொடுத்தீர்கள்? என்று வைத்திலிங்கம் எம்.பி. எங்களை கேட்கிறார்? 2 முறை முதல்-அமைச்சர், எதிர்க்கட்சி தலைவர் என பொறுப்பு வகித்த அவருக்கு ஏன் முதல்-அமைச்சர் பதவியை காங்கிரஸ் கட்சி தரவில்லை. கூட்டணி அடிப்படையில் நாங்கள் செயல்படுகிறோம்.

அவரது சமுதாயத்தில் அவரைத்தவிர வேறு யாரும் பதவிக்கு வரவிடாமல் மற்றவர்களை தடுத்தார். அ.தி.மு.க., என்.ஆர்.காங்கிரசைப்பற்றி பேச காங்கிரஸ் கட்சிக்கு என்ன தகுதி உள்ளது?

தி.மு.க.வின் கிளையாகத்தான் புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி செயல்படுகிறது.

இவ்வாறு அன்பழகன் எம்.எல்.ஏ. கூறினார்.

Next Story