மாவட்ட செய்திகள்

மழைக்கு வராதவர் ஓட்டுகேட்டு வருகிறார்: காமராஜ் நகர் தொகுதி மக்கள் ரங்கசாமியை புறக்கணிப்பார்கள் - நாராயணசாமி நம்பிக்கை + "||" + People in Kamaraj Nagar constituency ignore Rangasamy - Narayanaswamy believes

மழைக்கு வராதவர் ஓட்டுகேட்டு வருகிறார்: காமராஜ் நகர் தொகுதி மக்கள் ரங்கசாமியை புறக்கணிப்பார்கள் - நாராயணசாமி நம்பிக்கை

மழைக்கு வராதவர் ஓட்டுகேட்டு வருகிறார்: காமராஜ் நகர் தொகுதி மக்கள் ரங்கசாமியை புறக்கணிப்பார்கள் - நாராயணசாமி நம்பிக்கை
கனமழையில் பாதிக்கப்பட்டபோது வராமல் இப்போது ஓட்டுகேட்டு வரும் ரங்கசாமியை காமராஜ் நகர் தொகுதி மக்கள் புறக்கணிப்பார்கள் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,

புதுவை காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று சாமிப்பிள்ளைதோட்டம் கருவடிக்குப்பம் பகுதியில் வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அப்போது வைத்திலிங்கம் எம்.பி., ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ. மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.


வாக்குசேகரிப்பின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

வைத்திலிங்கம் எம்.பி. சொன்னதுபோல் 2015-ம் ஆண்டு கடும் மழையினால் காமராஜ் நகர் தொகுதி மக்கள் பாதிக்கப்பட்டபோது முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமி இந்த தொகுதி பக்கமே வரவில்லை. ஆனால் இப்போது வீடுவீடாக சென்று வாக்குசேகரிக்கிறார். ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவோம் என்கிறார். இதையேதான் நெல்லித்தோப்பு இடைத்தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலின்போதும் கூறினார். அப்போதெல்லாம் அவரை நிராகரித்த மக்கள் மரண அடி கொடுத்தார்கள். ஆனால் இப்போதும் ஆட்சி மாற்றம் என்றே கூறி வருகிறார். மக்களை ஏமாற்றி வாக்கு சேகரிக்க அவ்வாறு கூறிவருகிறார்.

அவரது ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் பாலாறும், தேனாறும் ஓடியதுபோலவும், நாங்கள் எதையும் செய்யவில்லை என்று குறைகூறுகின்றார். மக்களுக்கு அனைத்தும் தெரியும். புதுச்சேரி இப்போதுதான் அமைதிப்பூங்காவாக திகழ்கிறது. மக்களை நிம்மதியாக வாழ வைத்துள்ளோம். அவர்களது உயிருக்கும் உடைமைக்கும் நாங்கள் பாதுகாப்பு கொடுத்துள்ளோம்.

எதிர்க்கட்சி தலைவர் பத்திரிகைகளை படிப்பது கிடையாது. அதனால்தான் நாங்கள் எந்த திட்டத்தையும் கொண்டுவரவில்லை என்கிறார். ஸ்மார்ட் சிட்டி திட்டம், குடிநீர் திட்டம், சாகர்மாலா திட்டம், சுற்றுலா வளர்ச்சி திட்டங்களை எல்லாம் கொண்டு வந்தது யார்? முதியோர், விதவை, சென்டாக் நிதியுதவிகளை காலத்தோடு வழங்கி வருகிறோம். இலவச அரிசி வழங்கும் திட்டத்துக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுகின்றார். ரங்கசாமி அதற்கு ஜால்ரா அடிக்கிறார்.

2015-ம் ஆண்டு மழையின்போது ரெயின்போ நகர், கிருஷ்ணாநகர் பகுதிகளில் 5 அடி உயரத்துக்கு வெள்ளம் புகுந்தது. அப்போது நானும் வைத்திலிங்கமும் சென்று தண்ணீரை வடிய வைக்க நடவடிக்கை எடுத்தோம். அப்போது முதல்-அமைச்சராக இருந்த ரங்கசாமி காரிலேயே வந்துவிட்டு காரிலேயே சென்றுவிட்டார். ஆனால் இப்போது ஓட்டுகேட்டு வீடு வீடாக வருகிறார். அவர் ஒரு சந்தர்ப்பவாத அரசியல்வாதி. அப்போது காமராஜ் நகர் தொகுதியை புறக்கணித்த ரங்கசாமியை இப்போது மக்கள் புறக்கணிப்பார்கள்.

இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

அவரிடம், ராஜீவ்காந்தி குறித்த சீமானின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பியதற்கு, ‘சீமான் தரம் தாழ்ந்த அரசியல்வாதி. ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் உயிரிழந்தது எங்களுக்கு பேரிழப்பு. அதை கொச்சைப்படுத்தி பேசும் சீமான் அரசியல்வாதியாக இருக்க தகுதியற்றவர். அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசி விளம்பரம் தேடுகிறார். அவர் தன்னை திருத்திக்கொள்ளாவிட்டால் தமிழகம், புதுச்சேரி மக்கள் அவரை திருத்துவார்கள்’ என்றார்.