இந்தியா ‘இந்து நாடு' அல்ல; ஆர்.எஸ்.எஸ். தலைவருக்கு, ஒவைசி பதிலடி
இந்தியா ‘இந்து நாடு' அல்ல என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அசாவுதீன் ஒவைசி எம்.பி. பேசினார்.
மும்பை,
நாக்பூரில் கடந்த வாரம் நடந்த விஜயதசமி பூஜையில், ஆர்.எஸ்.எஸ். பார்வையில் இந்தியா ஒரு ‘இந்து ராஷ்டிரம்' (இந்து நாடு) என்பதில் உறுதியாக உள்ளதாக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கூறியிருந்தார். இதற்கு எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாவுதீன் ஒவைசி பதிலடி கொடுத்து உள்ளார்.
தானே மாவட்டம் கல்யாணில் அந்த கட்சி சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அசாவுதீன் ஒவைசி கலந்து கொண்டு பேசுகையில் கூறியதாவது:-
சமூகத்தின் ஒரு பிரிவினர் ஒட்டு மொத்த நாட்டையும் ஒரே வண்ணமாக்க விரும்புகிறார்கள். ஆனால் நாம் இந்தியாவை பல வண்ணங்களில் காண்கிறோம். இதுதான் இந்தியாவின் அழகு. இந்தியா ‘இந்து ராஷ்டிரம்' அல்ல. அவ்வாறு ஆகவும் விட மாட்டோம்.
சிவசேனா பச்சை நிறத்திற்கு எதிரானது. உங்களது (சிவசேனா) பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள். தேசிய கொடியில் பச்சை நிறம் உள்ளதை பாருங்கள். இந்தியாவின் தனித்துவமே அதன் பன்முகத்தன்மை தான். உலகத்தின் எந்தவொரு நாடும் இந்தியாவை போல் இல்லை என்பதில் பெருமைப்படுகிறோம். உங்கள் அனுதாபத்தினால் நாங்கள் வாழவில்லை என ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் உள்ளவர்களுக்கு சொல்லி கொள்ள விரும்புகிறேன். எம்.ஐ.எம். கட்சி தனது சொந்த முயற்சியால் அவுரங்காபாத்தில் தன்னை நிலை நிறுத்திக்கொண்டுள்ளது. நாங்கள் மராட்டியத்தின் மற்ற இடங்களிலும் பரவுவோம். உங்களால் எங்களை தடுக்க முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
Related Tags :
Next Story