பா.ஜனதாவில் சேர்ந்தார், நாராயண் ரானே
முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே பா.ஜனதாவில் இணைந்தார். மராட்டியத்தின் கொங்கன் மண்டலத்தின் சக்தி வாய்ந்த தலைவர் நாராயண் ரானே. சிவசேனா ஆட்சியின் போது, முதல்-மந்திரி பதவி வகித்தவர்.
மும்பை,
உத்தவ் தாக்கரேயுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2005-ம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார்.
காங்கிரசில் செல்வாக்குடன் இருந்த போதும், தனக்கு முதல்-மந்திரி பதவி வழங்காத விரக்தியில் 2017-ம் ஆண்டு காங்கிரசில் இருந்து விலகினார்.
தொடர்ந்து, மராட்டிய சுவாபிமான் கட்சியை தொடங்கிய நாராயண் ரானே, பா.ஜனதாவுடன் நெருக்கம் காட்டி வந்தார். இதன் பயனாக அவர் பா.ஜனதா சார்பில் மாநிலங்களவை எம்.பி. ஆனார்.
இந்தநிலையில், தனது சுவாபிமானி கட்சியை பா.ஜனதாவுடன் இணைக்க முடிவு செய்திருந்தார். இதற்கு பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. பா.ஜனதா- சிவசேனா கூட்டணியில் சல சலப்பு ஏற்பட்டதை தொடர்ந்து நாராயண் ரானே பா.ஜனதாவில் சேர்வதில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
இருப்பினும், தான் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் பா.ஜனதாவில் இணைவேன் என நாராயண் ரானே தெரிவித்து இருந்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன் நாராயண் ரானேயின் இளைய மகன் நிதேஷ் ரானே பா.ஜனதாவில் சேர்ந்தார். அவர் பா.ஜனதா சார்பில் கன்கவலி தொகுதியில் போட்டியிடுகிறார். பா.ஜனதாவில் கூட்டணியில் இருந்த போதிலும், அந்த தொகுதியில் நிதேஷ் ரானேயை எதிர்த்து சிவசேனா தனது வேட்பாளரையும் களம் இறக்கி உள்ளது.
இந்தநிலையில், நீண்ட தாமதத்திற்கு பிறகு நேற்று கன்கவலியில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் நாராயண் ரானே தனது மூத்த மகன் நிலேஷ் ரானே மற்றும் ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் சேர்ந்தார். மேலும் சுவாபிமானி கட்சியையும் பா.ஜனதாவுடன் இணைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நாராயண் ரானே ஆக்ரோஷமிக்க மற்றும் புத்திசாலித்தனமான தலைவர் என்றார். மேலும் அவர் பா.ஜனதா சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதன் மூலம் நாராயண் ரானே ஏற்கனவே கட்சியில் இணைந்து விட்டார் என கூறினார்.
நாராயண் ரானே பேசுகையில், முதல்-மந்திரி பட்னாவிசின் அரசியல் செயல்பாட்டால் ஈர்க்கப்பட்டேன். மாநிலத்தில் வளர்ச்சியை மேம்படுத்த பா.ஜனதாவில் சேர்ந்து உள்ளேன். பா.ஜனதாவில் தனிநபர்களை விட வளர்ச்சி தான் முக்கியமானது, என்றார்.
Related Tags :
Next Story