சிதம்பரம் அருகே, வீட்டு முன்பு அமர்ந்து மதுகுடித்ததை கண்டித்த பெண் மீது தாக்குதல் - 3 பேர் கைது


சிதம்பரம் அருகே, வீட்டு முன்பு அமர்ந்து மதுகுடித்ததை கண்டித்த பெண் மீது தாக்குதல் -  3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2019 3:15 AM IST (Updated: 16 Oct 2019 7:18 PM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம் அருகே வீட்டுமுன்பு அமர்ந்து மதுகுடித்ததை கண்டித்த பெண்ணை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே உள்ள எண்ணாநகரம் வால்க்காரமேடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி பூங்கொடி(வயது 35). இவர் நேற்று மாலை சொந்தவேலை காரணமாக சிதம்பரம் சென்று விட்டு, இரவு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டு முன்பு 6 பேர் கொண்ட கும்பல் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இதைபார்த்த பூங்கொடி ஏன்? எனது வீட்டு முன்பு அமர்ந்து மது குடிக்கிறீர்கள் என்று 6 பேர் கொண்ட கும்பலை கண்டித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அருகில் கிடந்த உருட்டுக்கட்டையை எடுத்து பூங்கொடியை சரமாரியாக தாக்கியதும், அவரது புடவை இழுத்து மானப்பங்கம் செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதைபார்த்த அந்த வழியாக சென்ற பொதுமக்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் 6 பேர் கொண்ட கும்பல் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

இதனால் உஷாரான பொதுமக்கள் அவர்களை விரட்டிச் சென்று, 3 பேரை மடக்கி பிடித்து சிதம்பரம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். பிடிபட்ட 3 பேரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், அவர்கள் எண்ணாநகரம் அடுத்த பன்னப்பட்டு கிராமத்தை சேர்ந்த திருஞானம் மகன் கலைவாணன்(24), நாகேஷ் மகன் பிரபாகரன்(22), அர்ச்சுனன் மகன் அருண்குமார்(24) மற்றும் தப்பி ஓடியவர்கள் அதேஊரை சேர்ந்த அசோக், ரஞ்சித், தினேஷ் ஆகியோர் என்பதும் வீட்டு முன்பு அமர்ந்து மது குடித்ததை கண்டித்த பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்கி, மானபங்கம் செய்து, கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

இதற்கிடையே தாக்குதலில் படுகாயமடைந்த பூங்கொடி சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் அசோக் உள்ளிட்ட 6 பேர் மீது சிதம்பரம் தாலுகா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து கலைவாணன், பிரபாகரன், அருண்குமார் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story