மீன் வளத்துறை சார்பில், 28½ லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு
மீன் வளத்துறை சார்பில், 28½ லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. இந்த அணையின் அருகே மீன் வளத்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதன் வளாகத்தில் 10-க்கும் மேற்பட்ட ராட்சத தொட்டிகள் உள்ளன. இங்கு மீன் குஞ்சுகள் வளர்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொட்டிகளில் வளர்க்கப்படும் மீன்கள் வைகை, சோத்துப்பாறை, மஞ்சளாறு ஆகிய அணைகளில் ஆண்டுதோறும் விடப்படுகிறது. இதைத்தவிர ஏரி, குளங்களில் வளர்க்கும் வகையில் பொதுமக்களுக்கு மீன் குஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வைகை அணையில் நடப்பு ஆண்டில் இதுவரை 12 லட்சத்து 50 ஆயிரம் மீன் குஞ்சுகள் வளர்ப்புக்காக விடப்பட்டுள்ளன. இந்த மீன் குஞ்சுகள் வலையில் சிக்காத வகையில் சிறிய ஓட்டைகளை கொண்ட வலைகளை மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடப்பு ஆண்டில் மொத்தம் 28½ லட்சம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 8 லட்சத்து 60 ஆயிரம் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. தற்போது மீன்வளத்துறை அலுவலக வளாகத்தில் உள்ள தொட்டிகளில் 3 லட்சம் மிருகால், ரோகு வகையை சேர்ந்த மீன் குஞ்சுகள் விற்பனைக்காக தயார் நிலையில் உள்ளன.
மிருகால், ரோகு வகையை சேர்ந்த ஆயிரம் மீன் குஞ்சுகளுக்கு ரூ.700 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று மீன் வளத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story