திண்டுக்கல் மாவட்டத்தில், 4,913 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு - டெங்கு சிகிச்சைக்கு தனி வார்டு
திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 4 ஆயிரத்து 913 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முருகபவனம்,
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, காய்ச்சல் சிகிச்சை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. காய்ச்சல் உள்ளிட்ட பிற நோய் பாதிப்புகளுடனும், விபத்துகளில் சிக்குபவர்களும், பாம்பு கடிபட்டவர்களும் நாள்தோறும் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களுக்காக 200 படுக்கை வசதிகள் கொண்ட பொதுநல சிகிச்சை பிரிவு கட்டிடம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் காய்ச்சலுக்காக சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவத்துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புக்காக இதுவரை 4ஆயிரத்து 913 பேர் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் உள்நோயாளிகளாக 929 பேர் சிகிச்சை பெற்றனர். மற்ற அனைவரும் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் கடந்த 1-ந்தேதி முதல் தற்போது வரை 1,646 பேர் காய்ச்சலுக்காக சிகிச்சை பெற்றனர். இதில் 419 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்றனர்.
அதேபோல் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிப்பதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் தனித்தனி வார்டுகளில் போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அனைத்து படுக்கைகளுக்கும் கொசுவலை அமைக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இதுவரை 5 பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்காக சிகிச்சை பெற்று சென்றுள்ளனர்.
பழனி அரசு மருத்துவமனையில் 3 பேருக்கு டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் சிகிச்சைக்கு பின்பு குணமடைந்து வீட்டுக்கு சென்றுவிட்டார். மற்ற 2 பேரும் உள்நோயாளிகளாக இருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றனர்.
Related Tags :
Next Story