காமராஜ் நகர் தொகுதியில் 144 தடை உத்தரவு - கலெக்டர் அருண் அறிவிப்பு


காமராஜ் நகர் தொகுதியில் 144 தடை உத்தரவு - கலெக்டர் அருண் அறிவிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:00 AM IST (Updated: 16 Oct 2019 10:52 PM IST)
t-max-icont-min-icon

வாக்குப்பதிவினையொட்டி காமராஜ் நகர் தொகுதியில் 144 தடை உத்தரவினை கலெக்டர் அருண் பிறப்பித்துள்ளார்.

புதுச்சேரி,

புதுவை கலெக்டரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுச்சேரி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் வருகிற 19-ந்தேதி மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதையொட்டி தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலில் இருந்து வருகின்றன. வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பரிசுகள் கொடுப்பதை தடுப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தேர்தல் கமிஷன் எடுத்து வருகிறது. மாநில எல்லை பகுதியில் போலீ சாரின் தீவிர சோதனைக்கு பிறகே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன. ரோந்து பணியிலும் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் சட்டம்- ஒழுங்கினை கட்டுக்குள் வைத்திருக்கவும், தேர்தலை அமைதியாக நடத்தவும் மாவட்ட ஆட்சித்துறை நடுவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரி காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு முடியும் வரை குற்ற நடைமுறை சட்டம் 1973, பிரிவு 144(2)ன்கீழ் தடை உத்தரவு பிறப்பித் துள்ளார்.

அதன்படி காமராஜ் நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் 19-ந்தேதி மாலை 5 மணிமுதல் வாக்குப்பதிவு முடியும் வரை 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பொது இடங்களில், தெருக்கள் போன்றவற்றில் கூடுவது கூடாது. பேனர்கள், விளம்பர தட்டிகள், பதாகைகள் வைப்பதற்கும் மற்றும் ஏந்தி செல்வதற்கும், கோஷங்கள் எழுப்புவதற்கும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயலை செய்வதற்கும், வாக்குப்பதிவினை பாதிக்கக் கூடிய எந்த செயலையும் செய்வதற்கும் முற்றிலும் தடை விதிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Next Story