மாமல்லபுரத்தில் பலத்த மழை; கங்கை கொண்டான் மண்டபம் இடிந்து விழுந்தது


மாமல்லபுரத்தில் பலத்த மழை; கங்கை கொண்டான் மண்டபம் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 17 Oct 2019 4:45 AM IST (Updated: 16 Oct 2019 11:13 PM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் பலத்த மழையின் காரணமாக கங்கை கொண்டான் மண்டபம் இடிந்து விழுந்தது.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் 63-வது திருத்தலமாக உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான கங்கை கொண்டான் மண்டபம் பேரூராட்சி அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. 14-ம் நூற்றாண்டில் பராங்குச மன்னனால் இந்த கோவிலும், மண்டபமும் கட்டப்பட்டது.

சித்திரை மாத பிரம்மோற்சவ திருவிழாக்காலங்களில் இந்த மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட தலசயன பெருமாள் உற்சவரை வைத்து பக்தர்கள் வழிபடுவது வழக்கம். இந்த மண்டபம் 6 தூண்களுடன் கருங்கல் கொண்டு முழுவதும் கட்டப்பட்ட பழமை வாய்ந்த மண்டபம் ஆகும்.

பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் வருகையின் போது காவல் துறை கட்டுப்பாட்டு அறை இந்த மண்டபத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை 7 மணி அளவில் மாமல்லபுரத்தில் பெய்த பலத்த மழையின்போது மண்டபத்தின் மேற்கு புறத்தில் தூணின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது.

தற்போது மண்டபத்தில் இன்னொரு பகுதி விரிசல் ஏற்பட்டு எப்போது இடிந்து விழுமோ என்ற அபாய கட்டத்தில் உள்ளது. இந்த மண்டப பகுதியின் எதிர் முனையில்தான் கங்கை கொண்டான் பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு, சென்னை செல்லும் மாநகர பஸ்கள் நின்று செல்வது வழக்கம். அதேபோல் சென்னையில் இருந்து வரும் பஸ்கள் இடிந்து விழுந்த இந்த இடத்தில்தான் பயணிகளை இறக்கிவிட்டு பஸ் நிலையத்திற்கு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் மண்டபம் இடிந்து விழும்போது காலை நேரத்தில் அங்கு பயணிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தற்போது இடிந்து விழுந்த ஆபத்தான நிலையில் உள்ள இந்த மண்டபத்தின் விரிசல் ஏற்பட்ட பகுதியில் பொதுமக்கள் யாரும் செல்லாத வண்ணம் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் தலைமையில் போலீசார் அங்கு தடுப்புகள் வைத்துள்ளனர். எனவே அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மண்டபத்தின் விரிசல் ஏற்பட்ட பகுதியை அகற்றி மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story