பாரிமுனையில் காப்பகத்தில் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை


பாரிமுனையில் காப்பகத்தில் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Oct 2019 4:15 AM IST (Updated: 16 Oct 2019 11:15 PM IST)
t-max-icont-min-icon

பாரிமுனையில் உள்ள பெண்கள் காப்பகத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமி திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெரம்பூர்,

சென்னை பாரிமுனையில் உள்ள பிடாரி கோவில் தெருவில் அரசு உதவி பெறும் தொண்டு நிறுவன பெண்கள் காப்பகம் இயங்கி வருகிறது. இங்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவரின் மகள் சவுரி அம்மாள் (வயது 15) என்ற சிறுமி தங்கி இருந்தார். கடந்த வருடம் கேரள மாநிலத்திற்கு வேலைக்காக சவுரிஅம்மாளை அவரது தாய் லட்சுமி அனுப்பி உள்ளார். அப்போது அங்கு வேலை செய்து வந்த சவுரி அம்மாளை அந்த மாநில அரசு குழந்தை தொழிலாளர் சட்டத்தின் கீழ் பிடித்து விழுப்புரத்தில் உள்ள காப்பகத்தில் அனுப்பி வைத்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து சென்னையில் உள்ள அரசு உதவி பெறும் தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இங்கு கடந்த ஒரு வருடமாக தங்கியிருந்த சவுரி அம்மாள் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று காப்பகத்தினரிடம் கேட்டுள்ளார்.

ஆனால் காப்பக நிர்வாகிகள் சிறுமியை வீட்டிற்கு அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சவுரி அம்மாள் காப்பகத்தில் வெளியே இருந்த இரும்பு கம்பியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்துல்காதர் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story