‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மாணவி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - தேனி கோர்ட்டு உத்தரவு


‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில், மாணவி உள்பட 3 பேரின் ஜாமீன் மனு தள்ளுபடி - தேனி கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:30 AM IST (Updated: 17 Oct 2019 12:17 AM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவி உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

தேனி,

‘நீட்’ தேர்வில் நடந்த ஆள்மாறாட்டம் தொடர்பாக தேனி சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை ஒரு மாணவி, 4 மாணவர்கள், அவர்களது பெற்றோர் என 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதில், வாணியம்பாடியை சேர்ந்த மாணவர் இர்பானின் தந்தை முகமது ‌‌ஷபி கடந்த 2-ந்தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.

15 நாட்கள் நீதிமன்ற காவல் முடிவடையும் நிலையில், முகமது ‌‌ஷபியை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில், மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம் முன்னிலையில் போலீசார் நேற்று ஆஜர்படுத்தினர். அவருக்கு வருகிற 25-ந்தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் மீண்டும் பாதுகாப்பாக அழைத்து சென்று தேனி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையே கைதான முகமது ‌‌ஷபி, மாணவர் உதித்சூர்யாவின் தந்தை டாக்டர் வெங்கடேசன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் கடந்த 9-ந்தேதி தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஜாமீன் கேட்டு கடந்த 14-ந்தேதி தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த ஜாமீன் மனுக்கள், மாவட்ட செசன்சு நீதிபதி விஜயா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து, இந்த ஜாமீன் மனுக்கள் மீதான விசாரணையை வருகிற 19-ந்தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன், மாணவர் ராகுல், அவருடைய தந்தை டேவிஸ் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் நேற்று முன்தினம் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்தநிலையில் இந்த வழக்கில் கைதான தர்மபுரியை சேர்ந்த மாணவி பிரியங்கா, அவருடைய தாயார் மைனாவதி, மாணவர் இர்பான் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுக்களை விசாரணை செய்த மாஜிஸ்திரேட்டு பன்னீர்செல்வம், 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மாணவர் பிரவீண், அவருடைய தந்தை சரவணன் ஆகியோரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு ஜாமீன் கேட்டு தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள், நாளை (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story