டெங்கு கொசுப்புழு உற்பத்தி: மீன்கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு அபராதம் கலெக்டர் நடவடிக்கை


டெங்கு கொசுப்புழு உற்பத்தி: மீன்கடை உரிமையாளர்கள் 3 பேருக்கு அபராதம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 17 Oct 2019 4:30 AM IST (Updated: 17 Oct 2019 12:51 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் டெங்கு கொசுப்புழு உற்பத்திக்கு காரணமாக இருந்ததையடுத்து மீன்கடைகளின் உரிமையாளர்கள் 3 பேருக்கு அபராதம் விதித்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை நடவடிக்கை எடுத்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மருத்துவ கல்லூரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளை கலெக்டர் அண்ணாதுரை நேரில் பார்வையிட்டு, அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மருத்துவ பரிசோதனைகள் ஆகியவை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவமனையில் கட்டிட அறைகள் மற்றும் வளாகம் தூய்மையாக இருக்கிறதா? என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

முன்னதாக, அவர் தஞ்சை முனிசிபல் காலனி குடியிருப்பு மற்றும் வணிக வளாக பகுதிகளில் டெங்கு கொசு புழு உற்பத்தியாகிறதா? என ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, முனிசிபல் காலனி பகுதியிலுள்ள மீன் விற்பனை கூடங்களில் ஆய்வு செய்த கலெக்டர், அங்கு டெங்கு கொசு புழுக்களின் உற்பத்தி கண்டறியப்பட்டதால், 2 மீன் விற்பனை கூட உரிமையாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும், ஒரு மீன் விற்பனை உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரமும் அபராதமாக விதித்து உத்தரவிட்டார்.

தூய்மையாக வைக்க வேண்டும்

பின்னர் அங்குள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளியில் டெங்கு கொசு புழு உற்பத்தி குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கலெக்டர், பொது மக்கள் மற்றும் வியாபாரிகளிடம் சுற்றுபுறத்தை தூய்மையாகவும், தண்ணீர் தேங்காதவாறும் வைத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.

இந்த ஆய்வின் போது தஞ்சை மருத்துவக்கல்லூரி முதல்வர் குமுதாலிங்கராஜ், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரவீந்திரன், மாநகர் நல அலுவலர் டாக்டர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story