கவர்னருடன் இணைந்து மக்களுக்கு எதிராக ரங்கசாமி செயல்படுகிறார் - நாராயணசாமி பேட்டி


கவர்னருடன் இணைந்து மக்களுக்கு எதிராக ரங்கசாமி செயல்படுகிறார் - நாராயணசாமி பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2019 11:45 PM GMT (Updated: 16 Oct 2019 7:29 PM GMT)

கவர்னருடன் இணைந்து மக்களுக்கு எதிராக ரங்கசாமி செயல்படுகிறார் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

புதுச்சேரி,

காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாரை ஆதரித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று ரெயின்போ நகரில் வீடுவீடாக சென்று வாக்குசேகரித்தார். அவருடன் பொதுச்செயலாளர் ஏ.கே.டி.ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

வாக்குசேகரிப்பின்போது முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

காங்கிரஸ் வேட்பாளர் ஜான்குமாருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்ய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் புதுச்சேரி வந்தார். ஆனால் அவர் கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய வரவில்லை.

அ.தி.மு.க.வானது என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிக்கிறதா? கடந்த 2011 சட்டமன்ற தேர்தலின்போது என்.ஆர்.காங்கிரஸ் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. ஆனால் வெற்றிபெற்றபின் அ.தி.மு.க.வை புறக் கணித்து விட்டு சுயேட்சை ஆதரவோடு ஆட்சி அமைத்தது. இதனால், ரங்கசாமி துரோகம் செய்துவிட்டார், முதுகில் குத்திவிட்டார் என்றும், அடுத்த நாடாளுமன்ற தேர்தலின்போது ரங்கசாமிக்கு ஓட்டுப்போடுவது தற்கொலைக்கு சமம் என்றும் ஜெயலலிதா பிரசாரம் செய்தார்.

அதை அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உணர்ந்து என்.ஆர்.காங்கிரசுடன் கூட்டணி இல்லாமல் இருந்திருந்தால் மரியாதைக்குரியவர்களாக இருந்து இருப்பார்கள். கூட்டணியில் பாரதீய ஜனதா இருந்தாலும் தேர்தல் வேலை செய்வதாக தெரியவில்லை.

ஆனால் எங்கள் கூட்டணியில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். என்.ஆர்.காங்கிரஸ் தனித்து விடப்பட்டுள்ளது. கவர்னரை விமர்சிப்பதே வேலையாகிவிட்டது என்று என்னைப்பார்த்து எதிர்க்கட்சி தலைவர் கூறியுள்ளார். கவர்னர் தனது கடமையை செய்ய தவறினால் அதை விமர்சிக்கும் பொறுப்பு அரசுக்கு உள்ளது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அதிகாரம் என்று கோர்ட்டு கூறிய பின்னரும் எங்களுடைய அதிகாரத்தில் தலையிடும்போது தட்டிக்கேட்கும் உரிமை எங்களுக்கு உள்ளது. இலவச அரிசி வழங்க கவர்னர் தடையாக இருப்பதை எதிர்த்து கேட்பதை விமர்சிப்பதாக கூறுகிறார். இதன் மூலம் மக்களுக்கு இலவச அரிசி போடவேண்டாம் என்று ரங்கசாமி கூறுகிறாரா?

கவர்னருடன் இணைந்து மக்களுக்கு எதிராக ரங்கசாமி செயல்படுகிறார். இந்த தேர்தலில் மக்கள் என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியை புறக்கணிப்பார்கள். ராஜீவ்காந்தி குறித்த விமர்சனத்தை சீமான் திரும்பப்பெற்று பகிரங்கமாக மன்னிப்பு கேட்கவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story