ரூ.50 லட்சம் கொள்ளை போனதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: நிதி நிறுவன அதிபர் உள்பட 12 பேர் கைது


ரூ.50 லட்சம் கொள்ளை போனதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்: நிதி நிறுவன அதிபர் உள்பட 12 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2019 3:45 AM IST (Updated: 17 Oct 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் ரூ.50 லட்சம் கொள்ளை போனதாக கூறப்பட்ட வழக்கில் நிதி நிறுவன அதிபர் உள்பட 12 பேர் கைது செய்யப்பட்டனா். விசாரணையில் அவர்கள், பைக்குள் வெற்று காகிதங்களை வைத்து கொடுத்தது அம்பலமானது. இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கருமத்தம்பட்டி,

கோவையை சோ்ந்தவர்கள் தர்ஷன் (வயது 23), ராகுல்குமார் (23). தொழில் அதிபர்கள். இவர்கள் தங்களுடைய தொழிலை மேம்படுத்துவதற்காக திருப்பூரை சேர்ந்த நிதி நிறுவன அதிபர் பிரபாகரன் என்பவரிடம் கடந்த 14-ந் தேதி சென்று சொத்து பத்திரத்தை கொடுத்து பணம் கேட்டனர்.

அவர் தர்ஷன், ராகுல் குமார் ஆகியோரிடம் ஒரு பையை கொடுத்து அதில் ரூ.30 லட்சம் பணமும், ரூ.20 லட்சத்துக்கு வங்கி காசோலையும் என நீங்கள் கேட்ட ரூ.50 லட்சம் உள்ளது. பெரிய தொகை என்பதால் பாதுகாப்புக்காக இந்த பையில் பூட்டு போடப்பட்டு உள்ளேன். நீங்கள் உங்கள் அலுவலகம் சென்றதும் சொல்லுங்கள். எனது உதவியாளரை அனுப்பி பையின் பூட்டை திறக்க சொல்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

இதை நம்பி தர்ஷன், ராகுல்குமார் ஆகியோர் அந்த பையுடன் கோவையை அடுத்த கணியூர் மேம்பாலம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தனர். அப்போது அவர்கள் மீது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் மோதினர். இதனால் அவர்கள் 4 பேரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

அப்போது 3 மோட்டார் சைக்கிளில் வந்த மற்றொரு கும்பல், தர்ஷன், ராகுல்குமார் ஆகியோரிடம் இருந்த பையை பறித்துக் கொண்டு தப்பி சென்றனர். இதனால் ரூ.50 லட்சம் கொள்ளை போனதாக போலீசில் புகார் கூறப்பட்டது. இது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்த புகாரின் பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா உத்தரவின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அனிதா ஆகியோர் மேற்பார்வையில் போலீஸ் துணை சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் லெனின் அப்பாதுரை, பாண்டியராஜன், அரவிந்த ராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள், கருமத்தம்பட்டி சென்னியாண்டவர் கோவில் அருகே வாகன தனிக்கையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதற்கு அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.

இதில் அவர்கள் நிதி நிறுவன அதிபர் பிரபாகரன் மற்றும் சரத்பாண்டி, மணிகண்டன், பாபு, சவுபர் சாதிக் ஆகியோர் என்பதும், அவர்களுக்கும் ரூ.50 லட்சம் கொள்ளை போனதாக கூறப்பட்ட வழக்கில் தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து போலீசார் நிதி நிறுவன அதிபர் பிரபாகரனிடம் விசாரணை நடத்தினர். அதில் தர்ஷன், ராகுல் குமார் ஆகியோரிடம் பணத்துக்கு பதிலாக வெற்றுக்காகிதங்களை பையில் வைத்து பூட்டி கொடுத்து விட்டு, ஆட்களை அனுப்பி கொள்ளையடித்து செல்ல பிரபாகரன் திட்டமிட்டு கொடுத்தது தெரிய வந்தது.

திட்டத்தை அரங்கேற்றி விட்டால் தர்ஷன், ராகுல்குமாரிடம் ரூ.50 லட்சம் பணத்தை திருப்ப கேட்டு நெருக்கடி கொடுப்பதோடு, அவர்களின் சொத்துகளை அபகரிக்கவும் திட்டமிட்டது அம்பலமானது. இதையடுத்து அவா்கள் 5 பேரையும் போலீசார் கைதுசெய்தனர்.

மேலும் பிரபாகரன் கொடுத்த தகவலின்பேரில் இந்த வழக்கில் தொடர்புடைய கிருபாகரன், வெண்டிமுத்து, சேதுராஜன், ஸ்ரீபிரவீன், பவுல் என்ற மணிகண்டன், தமிழரசன், சிவராஜ் ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர். ரூ.50 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் இதுவரை மொத்தம் 12 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தர்ஷன், ராகுல்குமாரிடம் பையை பறிக்கும் போது கீழே விழுந்து காயம் அடைந்த தமிழரசன், சிவராஜ் ஆகியோர் தற்போது கோவை அரசு ஆஸ்பத்திரியில் கைதிகள் வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story