பள்ளிகொண்டா அருகே, மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி


பள்ளிகொண்டா அருகே, மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலி
x
தினத்தந்தி 17 Oct 2019 4:30 AM IST (Updated: 17 Oct 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே மர்ம காய்ச்சலுக்கு சிறுமி பலியானாள். டெங்கு காய்ச்சல் பீதி பரவுவதால் மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அணைக்கட்டு, 

வேலூரை அடுத்த பள்ளிகொண்டா பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட பருவநிலை மாற்றத்தால் பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட பலர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற வந்தனர். குறிப்பாக வெட்டுவாணம் உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களுக்குத்தான் அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இது குறித்து தினத்தந்தியிலும் ஏற்கனவே செய்தி வெளியாகி இருந்தது

இந்த நிலையில் அதே பகுதியைசேர்ந்த சரண்ராஜ் என்பவரது மகள் நட்சத்திரா (வயது 4) என்ற சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை முதல் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தாள். அவளை பெற்றோர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் பயந்து போன பெற்றோர் சிறுமியை டிஸ்சார்ஜ்செய்துகொண்டு வேலூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அந்த சிறுமி செவ்வாய்க் கிழமை இரவு 11 மணிக்கு பரிதாபமாக இறந்துபோனார். ஏற்கனவே மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் வெட்டுவாணம் பகுதி பொதுமக்களும் டெங்கு காய்ச்சல் பீதியால் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் பள்ளிகொண்டா பேரூராட்சி சார்பில் அங்கு சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story