மயக்கம் அடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் விளக்கம்


மயக்கம் அடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் விளக்கம்
x
தினத்தந்தி 17 Oct 2019 4:00 AM IST (Updated: 17 Oct 2019 2:56 AM IST)
t-max-icont-min-icon

மயக்கம் அடைபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது எப்படி? என்பது குறித்து ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் விளக்கம் அளித்துள்ளார்.

நாகர்கோவில்,

ஆண்டுதோறும் அக்டோபர் 16-ந் தேதி உலக மயக்கவியல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டுக்கான மயக்கவியல் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரி வெளிேநாயாளிகள் பிரிவு கட்டிடத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியை டீன் பாலாஜிநாதன் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

உயிர் மீட்புமுறை

பொதுமக்கள் யாராவது பொது இடங்களில் திடீரென மயங்கி விழுந்தால் அவர்களது இருதயத்தின் செயல்பாடு நின்று விடும். எனவே அருகில் இருப்பவர்கள் ஆம்புலன்ஸ் வரும் வரையோ அல்லது அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும் வரையோ மயங்கி விழுந்தவரின் இருதயம் மீண்டும் செயல்படும் வகையில் நிமிடத்துக்கு 100 முதல் 120 முறை நெஞ்சின் நடுப்பகுதியில் அழுத்தி முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும்.

ஒருவரால் இவ்வாறு தொடர்ந்து செய்ய முடியாத பட்சத்தில் இரண்டு பேரோ அல்லது 3 பேரோ இணைந்து செய்யலாம். அவ்வாறு செய்தால் மயங்கி விழுந்தவரின் இருதயம் திரும்ப இயங்க வாய்ப்புள்ளது. எனவே இதுபற்றிய விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்பட வேண்டும். மார்பக அழுத்தம் மூலம் உயிர் பாதுகாப்பு என்ற இந்த உயிர் மீட்புமுறை வளர்ந்த நாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு டீன் பாலாஜிநாதன் கூறினார்.

பயிற்சி

இதில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரி கலைக்குமார், ரெனிமோள், மயக்கவியல் மருத்துவத்துறை தலைவர் எட்வர்டு ஜாண்சன், பேராசிரியர்கள் செல்வக்குமார் கிங்ஸிலி, முத்து செண்பகம், டாக்டர்கள் பிரேமகுமாரி, விஜயானந்த் மற்றும் மயக்கவியல் துறை முதுநிலை மாணவர்கள், மருத்துவக்கல்லூரி மாணவ- மாணவிகள், செவிலியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் நிகழ்ச்சியின் போது, மயக்கமடைந்து விழுபவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பது தொடர்பாக மனித உருவ பொம்மை மூலம் பொதுமக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

Next Story