வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை; கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


வைகை ஆற்றில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை; கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:00 AM IST (Updated: 17 Oct 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

வைகை ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை,

மதுரை சர்க்கரை ஆலை கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க பொருளாளர் மணிகண்டன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

வைகை ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளை அதிக அளவில் நடக்கிறது. இதனால் விவசாயம் பாதிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பொதுமக்களும் குடிநீருக்காக அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுவார்கள் என உறுதி அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

ஆனால் வைகை ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளை தொடருகிறது. குறிப்பாக நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணிவரை எந்திரங்கள் மூலம் லாரிகளில் மணல் அள்ளி, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவர்களுக்கு அதிகாரிகள் துணை போகின்றனர்.

இதுபற்றி புகார் செய்ததால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக மணல் கொள்ளையர்கள் மிரட்டுகின்றனர். எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் வைகை ஆற்றுப்படுகையில் மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். மணல் கொள்ளையர்கள் மற்றும் அவர்களுக்கு துணையாக உள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் கூறும் பகுதிகளில் மணல் கொள்ளையை தடுக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்” என்று தெரிவித்தார். முடிவில், வைகை ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளை நடைபெறுவது உறுதிப்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்கும் படி நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தனர்.

Next Story