திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முருகனின் போலீஸ் காவல் மேலும் 8 நாட்கள் நீட்டிப்பு


திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கு: முருகனின் போலீஸ் காவல் மேலும் 8 நாட்கள் நீட்டிப்பு
x
தினத்தந்தி 17 Oct 2019 4:00 AM IST (Updated: 17 Oct 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி நகைக்கடை கொள்ளை வழக்கில் மூளையாக செயல்பட்ட முருகனின் போலீஸ் காவலை மேலும் 8 நாட்கள் நீட்டிப்பு செய்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டது. மீண்டும் முருகனை தமிழகம் அழைத்து சென்று விசாரிக்க பெங்களூரு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

பெங்களூரு,

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே லலிதா ஜூவல்லரி நகைக்கடை உள்ளது. கடந்த 2-ந் தேதி அதிகாலை இந்த கடையின் பின்பக்க சுவரில் துளையிட்ட மர்மகும்பல் ரூ.12 கோடியே 41 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் முக்கிய குற்றவாளியான தமிழ்நாடு திருவாரூர் மாவட்டம் சீராத்தோப்பை சேர்ந்த முருகன் (வயது 45) என்பவரை தீவிரமாக தேடிவந்தனர்.

இந்த நிலையில் தலைமறைவாக இருந்த முருகன் கடந்த 11-ந் தேதி பெங்களூரு எம்.ஜி.ரோட்டில் உள்ள மோயோ ஹாலில் உள்ள மெட்ரோபாலிட்டன் 11-வது கோர்ட்டில் சரண் அடைந்தார். சரண் அடைந்த முருகனை 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். ஆனால், முருகன் மீது பெங்களூரு எச்.எஸ்.ஆர். லேஅவுட், பொம்மனஹள்ளி, பானசவாடி, மடிவாளா, அம்ருதஹள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களிலும், பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல், நெலமங்களா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.

இதனால் முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பொம்மனஹள்ளி போலீசார் மாஜிஸ்திரேட்டுவிடம் அனுமதி கோரினர். இதையடுத்து முருகனை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பொம்மனஹள்ளி போலீசாருக்கு, மாஜிஸ்திரேட்டு அனுமதி வழங்கினார். இதையடுத்து பொம்மனஹள்ளி போலீசார் முருகனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தொடங்கினர்.

முதற்கட்டமாக போலீசார் தமிழ்நாடு திருவெறும்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பூசத்துறை காவிரி ஆற்றுபடுகைக்கு முருகனை அழைத்து சென்றனர். அங்கு காட்டுப்பகுதியில் பள்ளம் தோண்டி முருகன் பதுக்கி வைத்த நகைகளை போலீசார் மீட்டனர். இவ்வாறாக 11 கிலோ 317 கிராம் தங்க நகைகள், 541.57 கிராம் வைர நகைகள், 37.79 கிராம் பிளாட்டின நகைகள் ஆகியவை மீட்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்றுடன் முருகனின் போலீஸ் காவல் முடிவடைந்தது. இதனால் நேற்று அவரை பொம்மனஹள்ளி போலீசார் பெங்களூரு மெட்ரோபாலிட்டன் 11-வது கூடுதல் மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். இதற்கிடையே, திருச்சி போலீசாரும் முருகனை போலீஸ் காவலில் எடுக்க முயன்றனர்.

ஆனால், முருகனிடம் விசாரணை நடத்தி வரும் பொம்மனஹள்ளி போலீசார் பெங்களூருவில் நடந்த திருட்டு தொடர்பாக முருகனிடம் விசாரணை நடத்த விருப்பம் தெரிவித்து போலீஸ் காவலை 10 நாட்கள் நீட்டிக்கும்படி மனு மூலம் அனுமதி கோரினர். இதை ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட்டு மேலும் 8 நாட்கள் முருகனை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க பொம்மனஹள்ளி போலீசாருக்கு அனுமதி வழங்கினார்.

இதனால் மீண்டும் பொம்மனஹள்ளி போலீசார் முருகனிடம் விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘முருகன் மீது பெங்களூரு நகரிலும், கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலும் வழக்குகள் உள்ளன. இதனால் அவரை தமிழ்நாடு, ஆந்திராவுக்கு அழைத்து சென்று விசாரித்து நகைகளை மீட்க உள்ளோம். தமிழகத்துக்கு மீண்டும் முருகனை அழைத்து சென்று விசாரிக்கும் திட்டம் உள்ளது. தமிழக போலீசாரும் எங்களுடன் சேர்ந்து விசாரிக்கலாம். இதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. மீட்கப்படும் நகைகள் எங்கு கொள்ளையடிக்கப்பட்டது என்பது ஆராயப்படும். தமிழகத்தில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்றால் அதற்கான ஆவணங்களை எங்களிடம் வழங்கினால் கோர்ட்டு மூலம் நாங்கள் நகைகளை தமிழக போலீசாரிடம் ஒப்படைப்போம்‘ என்றார்.

Next Story