கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் - தேவேகவுடா பேட்டி


கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் - தேவேகவுடா பேட்டி
x
தினத்தந்தி 16 Oct 2019 10:45 PM GMT (Updated: 16 Oct 2019 10:26 PM GMT)

கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் 15 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்று தேவேகவுடா கூறினார்.

பெங்களூரு, 

முன்னாள் பிரதமர் தேவேகவுடா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்க எம்.எல்.ஏ.க்களின் மனு வருகிற 22-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. சபாநாயகரின் நடவடிக்கையை உறுதி செய்தால், இடைத்தேர்தல் நடைபெறும். இல்லாவிட்டால் இடைத்தேர்தல் நடைபெறாது. கர்நாடக சட்டசபைக்கு இடைத்தேர்தல் நடந்தால் 15 தொகுதிகளிலும் ஜனதாதளம்(எஸ்) சார்பில் வேட்பாளர்களை நிறுத்துவோம்.

உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். பெங்களூரு மாநகராட்சி மன்றத்திற்கு இன்னும் 10 மாதங்களில் தேர்தல் வருகிறது. எல்லா இடங்களிலும் நாங்கள் வேட்பாளர்களை நிறுத்துவோம். இந்த விஷயத்தில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். தகுதி நீக்க எம்.எல்.ஏ. எச்.விஸ்வநாத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் வெறுப்படைந்து சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்துள்ளார். அதுபற்றி அவர் என்னிடம் கூறினார்.

சபாநாயகர் கேட்டுக் கொண்டதால் ராஜினாமா கடிதத்தை வாபஸ் பெற சா.ரா.மகேஷ் முடிவு செய்துள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பா மராட்டிய மாநிலத்திற்கு கட்சி பிரசாரத்திற்கு சென்றுள்ளார். இங்கு மாவட்டங்களுக்கு பொறுப்பு மந்திரிகளை அவர் நியமித்துள்ளார். அவர்கள் தங்களின் பணியை மேற்கொண்டுள்ளனர்.

24 மணி நேரத்தில் விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குமாரசாமிக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது எடியூரப்பா கெடு விதித்தார். தனது வீட்டில் வருமான வரி சோதனை நடந்தால், அதற்கு தேவேகவுடா தான் காரணம் என்று காங்கிரசை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. கே.என்.ராஜண்ணா கூறியுள்ளார். நாட்டின் பிரதமராக இருந்த நான், வருமான வரித்துறைக்கு அவ்வாறு கடிதம் எழுத முடியுமா?. அவ்வாறு கடிதம் எழுதினால், எனது மரியாதையை நானே குறைத்துக்கொள்வது போல் ஆகிவிடும்.

நாட்டின் பொருளாதார நிலை குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சித்துள்ளார். அவர் எந்த கட்சியையும் சாராதவர். அவர் கூறியபடி பொருளாதார நிலை மோசமாக தான் உள்ளது. இதுபற்றி பிரதமர் மோடிக்கு தெரியும். ஆனால் அவர், 370-வது சட்டப்பிரிவு ரத்து விஷயத்தில் அதிக ஆர்வம் காட்டுகிறார். இதை முன்வைத்து மோடி 2 மாநில தேர்தலில் பிரசாரம் செய்து வருகிறார். தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ள 3 எம்.எல்.ஏ.க்களை மீண்டும் எங்கள் கட்சியில் சேர்த்துக்கொள்ளும் திட்டம் இல்லை.

இவ்வாறு தேவேகவுடா கூறினார்.

Next Story