கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. திடீர் ராஜினாமா
கர்நாடகத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி. கே.சி.ராமமூர்த்தி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு கடந்த 2016-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் சார்பில் கே.சி.ராமமூர்த்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவரது பதவி காலம் வருகிற 2022-ம் ஆண்டு வரை உள்ளது.
இந்த நிலையில் கே.சி.ராமமூர்த்தி நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை நேரில் சந்தித்து வழங்கினார். ராஜினாமா செய்த பிறகு கே.சி.ராமமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:-
நாட்டின் வளர்ச்சியில் நானும் பங்கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதவியை ராஜினாமா செய்துள்ளேன். காங்கிரஸ் தலைவர்கள் என்னை தகுந்த மரியாதை யுடன் நடத்தினர். கட்சி தலைவர்கள் மீது எனக்கு மரியாதை இருக்கிறது.
ஆனால் எனக்கென்று சிந்தித்து செயல்பட சுதந்திரம் இருக்கிறது. ராஜினாமா குறித்து நான் யாருக்கும் தகவல் தெரிவிக்கவில்லை. மாநிலங்களவையில் பா.ஜனதாவுக்கு பெரும்பான்மை பலம் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நான் பதவியை ராஜினாமா செய்ததாக கூறுவது தவறு. பா.ஜனதாவில் சேருவது குறித்து 2 நாளில் முடிவு செய்வேன்.
இவ்வாறு கே.சி.ராமமூர்த்தி கூறினார்.
காங்கிரஸ் எம்.பி. ஒருவர் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது, அக்கட்சி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Related Tags :
Next Story