பி.யூ.கல்லூரி தேர்வு வினாத்தாள் கசிவதை தடுக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை; அதிகாரிகளுக்கு மந்திரி சுரேஷ்குமார் உத்தரவு
பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அத்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு சுரேஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு,
கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு (2020) மார்ச் மாதம் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். எக்காரணம் கொண்டும் வினாத்தாள் கசியாமல் இருக்க முன்எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
தேர்வில் தவறுகள் நடைபெறாத வண்ணம், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் எந்த குளறுபடியும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளேன். அடுத்த ஜனவரி மாதம் கல்வித்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தப்படும். 4 ஆண்டுகளுக்கு முன்பு வினாத்தாள் வெளியாகி மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிகழ்வு இன்னும் எனது மனதில் உள்ளது. தேசிய கல்வி கொள்கை குறித்து ஆலோசனை நடத்தினோம். மாநில அரசின் கருத்துகள் குறித்து விவாதித்து இருக்கிறோம். கோப்புகள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
Related Tags :
Next Story