மஞ்சனக்கொரையில், சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்


மஞ்சனக்கொரையில், சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியல்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:00 AM IST (Updated: 17 Oct 2019 10:26 PM IST)
t-max-icont-min-icon

மஞ்சனக்கொரையில் சாலையை சீரமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஊட்டி,

ஊட்டி நகராட்சியின் 36-வது வார்டுக்கு உட்பட்டது மஞ்சனக்கொரை பகுதி ஆகும். இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து மஞ்சனக்கொரைக்கு தனியார் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தங்களது கல்வி நிலையங்களுக்கு சென்று வருகின்றனர். மேலும் பொதுமக்களும் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள பல்வேறு இடங்களுக்கு செல்கின்றனர்.

ஆண்டுதோறும் கோடை சீசனின்போது ஊட்டிக்கு ஏராளமான சுற்றுலா வாகனங்கள் வருகின்றன. அப்போது ஊட்டி-குன்னூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை தவிர்க்க லவ்டேல் சந்திப்பில் இருந்து மஞ்சனக்கொரை வழியாக ஊட்டிக்கு சுற்றுலா வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. ஆனால் நடப்பாண்டில் மஞ்சனக்கொரை சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் வாகன போக்குவரத்துக்கு உகந்தது இல்லை எனக்கூறி சுற்றுலா வாகனங்கள் அந்த வழியாக அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் சாலை மேலும் மோசமாக மாறியது. இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தனர். மேலும் மாணவர்கள், முதியவர்கள் அந்த வழியாக நடந்து செல்ல அவதி அடைந்து வருகின்றனர். அங்கு சாலை மோசமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் அறிவிப்பு பலகை வைத்தனர்.

இந்த நிலையில் குண்டும், குழியுமாக உள்ள அந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று ஊட்டி-இத்தலார் சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் ஊட்டியில் இருந்து நஞ்சநாடு, எமரால்டு, மஞ்சூர் செல்லும் அரசு பஸ்கள் மற்றும் தனியார் மினி பஸ்கள் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகராட்சி கமி‌‌ஷனர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். அதன்பின்னர் அந்த வழியே போக்குவரத்து சீரானது.

Next Story