பள்ளிக்கு குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர லாரஸ்டன்-கூடலூர் இடையே வாகன வசதி செய்து தர வேண்டும் - ஆர்.டி.ஓ.விடம், ஆதிவாசி மக்கள் கோரிக்கை


பள்ளிக்கு குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர லாரஸ்டன்-கூடலூர் இடையே வாகன வசதி செய்து தர வேண்டும் - ஆர்.டி.ஓ.விடம், ஆதிவாசி மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2019 3:45 AM IST (Updated: 17 Oct 2019 10:38 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிக்கு குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர லாரஸ்டன்-கூடலூர் இடையே வாகன வசதி செய்து தர வேண்டும் என்று ஆர்.டி.ஓ.விடம், ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் அடர்ந்த வனம் மற்றும் தேயிலை தோட்டங்கள் உள்ளதால் வனவிலங்குகள் நடமாட்டமும் அதிகமாக உள்ளது. காட்டுயானைகள், சிறுத்தைப்புலிகள் தினமும் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றன. நேற்று முன்தினம் கூடலூர் ராக்லேண்ட் தெருவுக்குள் நள்ளிரவு குட்டியுடன் கூடிய கடமான் ஒன்று திசைமாறி நுழைந்தது. பின்னர் பொதுமக்கள் கடமான் மற்றும் அதன் குட்டியை விரட்டினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர் கோக்கால் மலையடிவாரம், மேல்கூடலூர், ஹெல்த்கேம்ப், கெவிப்பாரா, லாரஸ்டன் 4-ம் நெம்பர் உள்ளிட்ட இடங்களில் காட்டுயானைகள், கரடிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் வெளியில் நடந்து செல்லும் நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் கூடலூர் அருகே ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட லாரஸ்டன் 4-ம் நெம்பர் கிராமத்தில் ஏராளமான ஆதிவாசி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவைகளுக்காக கூடலூருக்கு வந்து செல்கின்றனர். இக்கிராமத்துக்கு பஸ் வசதி கிடையாது.

மேலும் தனியார் வாகனங்களும் அப்பகுதியில் இயக்கப்படுவது இல்லை. இதனால் தினமும் காலையில் அந்த கிராமத்தில் இருந்து ஆதிவாசி மக்கள், பள்ளி குழந்தைகள் நடந்து கூடலூருக்கு வருகின்றனர். அப்போது வட்டப்பாறை உள்ளிட்ட இடங்களில் காட்டுயானைகள், கரடிகள் நடமாட்டம் இருப்பதால் அச்சத்துடன் சென்று திரும்புகின்றனர். இதே நிலை மாலை வேளையிலும் காணப்படுகிறது. பள்ளிக்கு சென்று குழந்தைகள் வீடு திரும்பும் வரை பெற்றோர் கவலையுடன் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் வனவிலங்குகள் தாக்கும் அபாயம், வாகன வசதி இன்மை உள்ளிட்ட காரணங்களால் குழந்தைகளும் பள்ளிக்கு சரிவர செல்வது இல்லை.

எனவே பள்ளிக்கு குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர லாரஸ்டன்-கூடலூர் இடையே வாகன வசதி செய்து தர வேண்டும் என்று ஆதிவாசி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சகாதேவன் தலைமையில் ஆதிவாசி மக்கள் கூடலூரில் ஆர்.டி.ஓ. ராஜ்குமாரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில், லாரஸ்டனில் இருந்து கூடலூருக்கு பள்ளி குழந்தைகள் பாதுகாப்பாக சென்று வர வாகன வசதி செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது. மனுவை பெற்று கொண்ட ஆர்.டி.ஓ. ராஜ்குமார், உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார்.

Next Story