சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி பேராசிரியரின் மனைவி பலி
சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு கல்லூரி பேராசிரியரின் மனைவி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்,
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கவும், டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். சேலம் மாநகரில் டெங்குவை தடுக்க 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் தூய்மை பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், சேலத்தில் டெங்கு காய்ச்சலுக்கு தனியார் கல்லூரி பேராசிரியரின் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
சேலம் மணக்காடு ராஜகணபதி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி யோகேஸ்வரி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் ஏதும் இல்லை. நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பாலகிருஷ்ணன் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இதனால் கணவன், மனைவி இருவரும் நாமக்கல் கணேசபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு யோகேஸ்வரிக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் அவதிப்பட்டு வந்த அவர், பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதையடுத்து நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் யோகேஸ்வரி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவரது ரத்த மாதிரியை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் மேல் சிகிச்சைக்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு யோகேஸ்வரியை அவரது உறவினர்கள் அழைத்து வந்து சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி யோகேஸ்வரி திடீரென உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் மணக்காடு ராஜகணபதி நகரில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது உடலை பார்த்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் கதறி அழுதனர்.
டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக பெண் உயிரிழந்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story