சமூக விரோதிகளின் கூடாரமாகிறது வியாசர்பாடி கணேசபுரத்தில் அலங்கோலமாக காட்சியளிக்கும் மாநகராட்சி பூங்கா ‘அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள்’ என மக்கள் புகார்


சமூக விரோதிகளின் கூடாரமாகிறது வியாசர்பாடி கணேசபுரத்தில் அலங்கோலமாக காட்சியளிக்கும் மாநகராட்சி பூங்கா ‘அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள்’ என மக்கள் புகார்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:15 AM IST (Updated: 18 Oct 2019 12:24 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வியாசர்பாடி கணேசபுரத்தில் மாநகராட்சி பூங்கா அலங்கோலமாகி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியிருக்கிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக மக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியில் தண்டையார்பேட்டை மண்டலத்துக்குட்பட்ட வியாசர்பாடி கணேசபுரத்தில் சஞ்சய்நகர் மாநகராட்சி பூங்கா ஒன்று உள்ளது. ஒருகாலத்தில் குழந்தைகள் ஆடிப்பாடி துள்ளி விளையாடி மகிழ்ந்த, முதியோர் இளைப்பாறி ஓய்வெடுத்த இந்த பூங்கா தற்போது மிகவும் பரிதாபமாக காட்சியளிக்கிறது.

பூங்காவில் உள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்தும், நாற்காலிகள் சேதமடைந்தும் இருக்கின்றன. பூங்காவில் உள்ள நடைபாதைகளை சுற்றிலும் புதர்கள் மண்டி கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் குப்பைகளும், காலி மது பாட்டில்களுமே காணும் காட்சிகளாக இருக்கின்றன.

சஞ்சய்நகர் பூங்காவின் இந்த அவலநிலை குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:–

கணேசபுரம் பகுதி மக்கள் பெரிதும் பயன்படுத்திய பூங்கா இது. ஆனால் முறையான பராமரிப்பின்றி இந்த பூங்கா தற்போது அலங்கோலமாகி இருக்கிறது. பகலிலும், இரவிலும் இந்த பூங்காவில் சமூக விரோதிகள் மது குடித்து கிடக்கிறார்கள். உடைந்த நாற்காலிகளில் நாய்கள் ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றன. பசுமை போர்த்திய செடி, கொடிகள் நிறைந்த இந்த பூங்கா தற்போது பாழடைந்த இடமாக மாறியிருக்கிறது. குப்பைகள் சூழ்ந்து துர்நாற்றம் வீசுவதால் பூங்கா எப்போதுமே வெறிச்சோடி காணப்படுகிறது. பூங்காவின் முன்பு அத்துமீறி வாகனங்களும் நிறுத்தப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து பலமுறை தண்டையார்ப்பேட்டை மாநகராட்சி மண்டல அதிகாரிகளிடம் புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் அலட்சியம் காட்டுகிறார்கள். மழை பெய்தால் இந்த பூங்காவை சுற்றிலும் ஆறு போல மழைநீர் சூழ்ந்துவிடும். அதனை அகற்றக்கூட ஊழியர்கள் வரமாட்டார்கள். தற்போது பெய்த மழையில் பூங்காவை சுற்றி மழைநீர் தேங்கியிருக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் நிலவுகிறது. எனவே மக்கள் நலனை கருத்தில் கொண்டு பூங்காவை சீரமைப்பதுடன், அப்பகுதியில் மழைநீர் வடிகால்வாய் அமைப்பையும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story