பொருட்கள் வாங்குவது போல் நடித்து கத்திமுனையில் பெண்ணிடம் நகை பறிப்பு - 2 பேருக்கு போலீஸ் வலைவீச்சு
மொடக்குறிச்சி அருகே பொருட்கள் வாங்குவது போல் நடித்து கத்திமுனையில் பெண்ணிடம் நகையை பறித்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
மொடக்குறிச்சி,
சேலம் மாவட்டம் மல்லூர் அருகே உள்ள பிச்சைமலையை சேர்ந்தவர் தீனதயாளன். அவருடைய மனைவி ஜானகி (வயது 34). இவர் ஆன்லைனில் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் தனியார் நிறுவனத்தில் முகவராக வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் தன்னுடைய பேஸ்புக்கில் வீட்டு உபயோக பொருட்கள் சிலவற்றை பதிவிட்டிருந்தார். இதை பார்த்த ஈரோட்டை சேர்ந்த ஒருவர், உங்கள் பொருட்கள் எனக்கு பிடித்திருக்கிறது. அவற்றை வாங்க ஆசைப்படுகிறேன். எனவே அவற்றின் மாதிரிகளை ஈரோடு பஸ்நிலையத்துக்கு கொண்டு வாருங்கள் என்று பேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து ஜானகி வீட்டு் உபயோக பொருட்களின் மாதிரியை எடுத்துக்கொண்டு ஈரோடு பஸ் நிலையம் வந்து காத்திருந்தார். பொருட்கள் கேட்ட நபரும் ஒரு பெண்ணுடன் அங்கு வந்தார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் ஜானகியிடம் வாருங்கள் வீட்டில் வைத்து பேசிக்கொள்ளலாம் என்று கூறி மோட்டார்சைக்கிளில் ஏற்றி அழைத்து சென்றனர். ஈரோடு-கரூர் ரோட்டில் மொடக்குறிச்சி 46 புதூர் அருகே உள்ள பரிசல்துறையில் சென்றபோது மோட்டார்சைக்கிளை அந்த நபர் நிறுத்தினார்.
பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை காட்டி ஜானகிகழுத்தில் அணிந்திருந்த 7பவுன் தாலிசங்கிலியை கொடுக்குமாறு கூறினார்கள். இதனால் பயந்து போன ஜானகி, தாலிசங்கிலியை கழற்றி அவர்களிடம் கொடுத்தார். அதன்பின்னர் 2 பேரும் அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் ஏறி தப்பித்து சென்றனர்.
இதுகுறித்து ஜானகி மொடக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து நகையை பறித்துவிட்டு தப்பித்து சென்ற 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story