திருப்பூர் ஆத்துப்பாளையத்தில், பணம் வைத்து சூதாடிய 36 பேர் கைது - 8 கார் உள்பட 32 வாகனங்கள் பறிமுதல்


திருப்பூர் ஆத்துப்பாளையத்தில், பணம் வைத்து சூதாடிய 36 பேர் கைது - 8 கார் உள்பட 32 வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 17 Oct 2019 10:45 PM GMT (Updated: 17 Oct 2019 8:08 PM GMT)

திருப்பூர் ஆத்துப்பாளையம் பகுதியில் தனியார்கிளப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 36 பேர் கைது செய்யப்பட்டனர். அத்துடன் 8 கார்கள் உள்பட 32 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் இசக்கிமுத்து (வயது 37) என்பவருக்கு சொந்தமான கிளப் செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் இரவு அந்த கிளப்பில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடுவதாக 15 வேலம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சைமணி தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்று அந்த கிளப்பை சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பல் தப்பி ஓடமுயன்றது. ஆனால் போலீசார் அவர்கள் அனைவரையும் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

இதில் அவர்கள் கோவை அரசூரை சேர்ந்த துரைராஜ் (46), கிளப் உரிமையாளர் இசக்கிமுத்து உள்பட 36 பேர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் அனைவரையும் கைது செய்தனர். மேலும் சூதாட்டத்திற்கு பயன்படுத்திய ரூ.38 ஆயிரத்து 360 மற்றும் 8 கார்கள், 24 இருசக்கர வாகனம் என மொத்தம் 32 வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து 15 வேலம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் ஆத்துப்பாளையத்தில் தனியார் கிளப்பில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 36 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story