வ.உ.சி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன் பேட்டி


வ.உ.சி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் கரூர் கோர்ட்டில் ஆஜரான முகிலன் பேட்டி
x
தினத்தந்தி 17 Oct 2019 11:15 PM GMT (Updated: 17 Oct 2019 8:24 PM GMT)

வ.உ.சி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கரூர் கோர்ட்டில் ஆஜரான சமூக ஆர்வலர் முகிலன் தெரிவித்தார்.

கரூர்,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன் (வயது 53). இவர் மீதான பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். முகிலன் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு கரூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த முகிலனை போலீசார் பலத்த பாதுகாப்புடன் வேனில் கரூர் கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். பின்னர் வழக்கு தொடர்பாக கரூர் முதன்மை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நீதிபதி கோபிநாத் முன்பு, முகிலன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது வழக்கு விசாரணையை வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து முகிலன் அங்கிருந்து வேனில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார்.

பேட்டி

முன்னதாக முகிலன் நிருபர்களிடம் கூறுகையில், சீமான் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்கினை ரத்து செய்ய வேண்டும். கருத்துரிமையை பறிக்கின்ற செயல்பாடுகளை அரசு கைவிட வேண்டும். அந்தமான் சிறையில் இருந்தபோது மன்னிப்பு கடிதம் எழுதி கொடுத்து விட்டு வந்தவரும், காந்தியை கொலை செய்ய திட்டம் தீட்டியவருமான சாவர்க்கருக்கு பாரத ரத்னா விருது கொடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும்.

மாறாக தமிழகத்தில் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில் செக்கிழுத்து, கல் உடைத்த வ.உ.சி.க்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். ஈழத்தில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது ஆட்சியிலிருந்தது காங்கிரஸ் தான். ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களை மோடி அரசு செயல் படுத்த துடிக்கிறது. எனவே தமிழகத்தில் இருந்து காங்கிரஸ், பா.ஜ.க. கட்சிகளை விரட்டியடிக்க வேண்டும். மணல், கிரானைட் கொள்ளையினை தடுத்திட வேண்டும். இதற்காக போராடினால் சிறை என்றால், அடக்குமுறைக்கு நாங்கள் அஞ்சமாட்டோம் என்றார்.

Next Story