முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் கலெக்டர், போலீஸ் ஐ.ஜி. நேரில் ஆய்வு
முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழாவையொட்டி பசும்பொன்னில் மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
கமுதி,
கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் வருகிற 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் முத்துராமலிங்க தேவரின் 112-வது ஜெயந்தி விழா மற்றும் 57-வது குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதன்படி 28-ந்தேதி ஆன்மிக விழாவும், 29-ந்தேதி அரசியல் விழாவும், 30-ந்தேதி குருபூஜை விழாவும் நடக்கிறது. 30-ந்தேதி காலை 9 மணிக்கு தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இதேபோல தி.மு.க. சார்பில் அதன் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளனர்.
இந்த நிலையில் விழா ஏற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் ஆகியோர் பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தேவர் நினைவிடம், அவர் வாழ்ந்த வீடு, புகைப்பட கண்காட்சி, பொதுமக்கள் வந்து செல்லும் வழிகள், முடிக்காணிக்கை செலுத்துமிடம், வாகனங்கள் நிறுத்துமிடம், அன்னதான பந்தல்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர். முன்னதாக அவர்களை நினைவாலய பொறுப்பாளர் காந்திமீனாள் நடராஜன், நிர்வாகிகள் சத்தியமூர்த்தி, பழனி, ரவி என்ற தங்கவேல், ராமச்சந்திரன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து தேவரின் வீட்டில் கலெக்டர் வீரராகவராவ், ஐ.ஜி. சண்முக ராஜேசுவரன் மற்றும் அதிகாரிகள் விழா குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருணாஸ், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா, ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், பரமக்குடி வருவாய் கோட்டாட்சியர் ராமன், அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் சிங்காரவேலு, மாவட்ட போக்குவரத்து அலுவலர் செல்வகுமார், மக்கள் தொடர்பு அலுவலர் (பொறுப்பு) கயிலை செல்வம், கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மகேந்திரன், யூனியன் ஆணையாளர் மல்லிகா, வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஷ்குமார், சத்தியேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி, துணை தாசில்தார் கண்ணதாசன், வருவாய் ஆய்வாளர்கள் முருகானந்தம், முத்துராமலிங்கம் உள்பட அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story