தந்தையின் மனு தள்ளுபடி: ‘நீட்’ ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன்
‘நீட்’ தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் உதித்சூர்யாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும், அவரது தந்தையின் மனுவை தள்ளுபடி செய்தும் மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
சென்னையை சேர்ந்த மாணவர் உதித்சூர்யா, ஆள்மாறாட்டம் செய்து நீட் ேதர்வு எழுதி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்ததாக எழுந்த விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, உதித்சூர்யா மற்றும் அவருடைய தந்தை டாக்டர் வெங்கடேசனை கைது செய்தனர்.
இதற்கிடையே உதித்சூர்யா தனக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் கைது செய்யப்பட்டதால், அவரது முன்ஜாமீன் மனுவை ஜாமீன் மனுவாக மாற்றி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கடந்த 15-ந்தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தேனி கோர்ட்டில் நிலுவையில் உள்ள உதித்சூர்யா தந்தை டாக்டர் வெங்கடேசனின் ஜாமீன் மனுவை மதுரை ஐகோர்ட்டுக்கு மாற்றும்படியும் உத்தரவிடப்பட்டது.
இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, “உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். படத்தை பார்த்து அதுபோல நடந்திருக்கி றார். மாணவர் உதித்சூர்யாவின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் மதுரை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு முன்பு தினந்தோறும் காலை 10.30 மணி அளவில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். வெங்கடேசனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது” என்று உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story