கிரு‌‌ஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட கூட்டம்


கிரு‌‌ஷ்ணகிரியில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மை திட்ட கூட்டம்
x
தினத்தந்தி 17 Oct 2019 10:45 PM GMT (Updated: 17 Oct 2019 9:22 PM GMT)

கிரு‌‌ஷ்ணகிரியில் நடந்த ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்ட கூட்டத்தில் முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் கலந்து கொண்டார்.

கிரு‌‌ஷ்ணகிரி,

வேலூர் மண்டலத்திற்கு உட்பட்ட கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் ஆயத்த கூட்டம் கருவூலக கணக்கு துறை முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் தலைமையில் நடந்தது. மாவட்ட கலெக்டர் பிரபாகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் முதன்மை செயலாளர் தென்காசி ஜவஹர் பேசியதாவது:-

தமிழக அரசு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திட தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவில் முதல் முறையாக மாநில நிதி மேலாண்மை மற்றும் மனித வள மேலாண்மையை ஒருங்கிணைத்து அரசு நிர்வாகத்தை மேம்படுத்தும் பொருட்டு தமிழக அரசு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.

ஓய்வூதிய பலன்கள்

இதை செயல்படுத்துவதின் மூலம் அரசின் நிதி நிர்வாக மற்றும் வரவு, செலவு குறித்த விவரங்களை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். அரசின் நிதி நிர்வாகத்தை மிக துல்லியமாக நடத்திட இயலும். மேலும் அரசு பணியாளர்களை மிக சிறப்பாக மக்கள் சேவைக்கு பயன்படுத்தலாம். இதன் மூலம் 9 லட்சம் அரசு பணியாளர்கள், 8 லட்சம் ஓய்வூதியர்கள் பயன் அடைவார்கள்.

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 680 ஓய்வூதியர்களுக்கு ரூ.22 கோடியே 54 லட்சத்து 25 ஆயிரத்து 959 ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் செப்டம்பர் மாதத்தில் வழங்கப்பட்டுள்ளது. சம்பளமில்லா பட்டியல்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி மகப்பேறு திட்டம் போன்ற அரசின் திட்டங்கள் வாயிலாக செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டும், அரசின் வரவினங்களாக ரூ.15 கோடியே 89 லட்சத்து 87 ஆயிரத்து 616 வரப்பெற்றுள்ளது.

100 சதவீதம் நிறைவு

மாவட்டத்தில் 23 ஆயிரத்து 10 மின் பணிப்பதிவேடுகள் தொடர்பான பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்ய முழு அர்ப்பணிப்புடன் செயல்பட்ட அனைத்துத்துறை பணியாளர்களுக்கும் என்னுடைய பாராட்டுக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பண்டி கங்காதர், மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மண்டல இணை இயக்குனர் புவனேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவன், துணை இயக்குனர் பிரியாராஜ், கருவூல அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story