கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறிப்பு பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது


கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறிப்பு பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2019 10:15 PM GMT (Updated: 17 Oct 2019 9:58 PM GMT)

திருச்சியில் வெவ்வேறு சம்பவங்களில் கத்தியை காட்டி மிரட்டி 2 பேரிடம் பணம் பறித்ததாக பிரபல ரவுடி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி,

திருச்சி பாலக்கரை மார்சிங்பேட்டை சவேரியார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் பிரபு(வயது25). இவர், நேற்று முன்தினம் முதலியார் சத்திரம் மெயின்ரோட்டின் ஓரமாக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு வாலிபர், கத்தியை காட்டி மிரட்டி பிரபுவிடம் இருந்து ரூ.500 பறித்து சென்றார்.

இது குறித்து பாலக்கரை போலீசில் பிரபு புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில், ரூ.500 வழிப்பறி செய்தது பாலக்கரை கூனிபஜாரை சேர்ந்த பாண்டி என்ற வீரமுத்து(24) என்பதும், அவர் பிரபல ரவுடி என்பதும் தெரியவந்தது. வீரமுத்துவை போலீசார் கைது செய்தனர். அவர் மீது பாலக்கரை போலீஸ் நிலையத்தில் மட்டும் வழிப்பறி, கொலைமிரட்டல் உள்ளிட்ட 4 வழக்குகளும், காந்தி மார்க்கெட் போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும் உள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

2 பேர் கைது

ஸ்ரீரங்கம் அம்மாமண்டபத்தை சேர்ந்தவர் பாண்டியன்(41). இவர், அம்மாமண்டபம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர், கத்தியை காட்டி மிரட்டி பாண்டியன் சட்டைப்பையில் இருந்த ரூ.1000-த்தை பறித்து கொண்டு தப்பினர்.

இது குறித்து ஸ்ரீரங்கம் குற்றப்பிரிவு போலீசில் பாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து திருச்சி தென்னூரை சேர்ந்த பிசால் அகமது, முகமது ரபீக் ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

Next Story