நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்


நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா: தி.மு.க. எம்.எல்.ஏ.வை சரமாரி தாக்கி வீட்டில் பூட்டி சிறைவைத்த பொதுமக்கள்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:45 AM IST (Updated: 18 Oct 2019 3:58 AM IST)
t-max-icont-min-icon

நாங்குநேரி தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய முயன்றதாக தி.மு.க. எம்.எல்.ஏ.வை பொதுமக்கள் சரமாரியாக தாக்கி வீட்டில் வைத்து பூட்டி சிறைவைத்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இட்டமொழி, 

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் வருகிற 21-ந் தேதி நடக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் பிரசாரம் அனல் பறந்து வருகிறது. தேர்தல் விதிமுறைகள் குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நாங்குநேரி தொகுதிக்கு உட்பட்ட மூலைக்கரைப்பட்டி அருகே அம்பலம் பகுதியில் மாரியப்பன் என்பவரின் வீடு உள்ளது. இவர் பத்திரப்பதிவுத்துறை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்.

நாங்குநேரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பெரியகுளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வான சரவணக்குமார் தனது ஆதரவாளர்களுடன் மாரியப்பனின் வீட்டில் தங்கி இருந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே மாரியப்பனின் வீட்டில் வைத்து ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படுவதாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாரியப்பன் வீட்டிற்கு திரண்டு வந்தனர். வீட்டில் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட சிலர் இருந்தனர். அவர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து கொண்டு இருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள அரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஏராளமான இளைஞர்கள், பொதுமக்கள் பணப்பட்டுவாடா செய்யும் அம்பலத்தில் உள்ள வீட்டிற்கு வந்தனர். அப்போது, நாங்கள் எங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால், நீங்கள் எப்படி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கலாம் என்று தி.மு.க.வினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சரவணக்குமார் எம்.எல்.ஏ. உள்பட 4 பேரையும் சரமாரியாக தாக்கினர். அதில் அவர்கள் காயம் அடைந்தனர். மேலும் அவர்களின் கையில் இருந்த துண்டு பிரசுரம், 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கீழே சிதறிக்கிடந்தன. இதையடுத்து 4 பேரையும் அந்த வீட்டில் வைத்து பூட்டி பொதுமக்கள் சிறைவைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து உடனடியாக மூலைக்கரைப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நாங்குநேரி துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் போலீசார், வீட்டின் கதவை திறந்து 4 பேரையும் வெளியே அழைத்து வந்தனர்.

அப்போது, அவர்களிடம் இருந்து வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ய வைத்து இருந்த ரூ.2.78 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து தேர்தல் பறக்கும் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து பிடிப்பட்ட 4 பேரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து தாக்குதலில் காயமடைந்த சரவணக் குமார் எம்.எல்.ஏ. சிகிச்சைக் காக நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

களக்காடு அருகே உள்ள கட்டார்குளத்தில் சிலர் ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையில் குழுவினர் அப்பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது, அ.தி.மு.க.வினர் வாக்காளர் பட்டியலுடன் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள குருந்தமடத்தை சேர்ந்த சொக்கலிங்கம் மகன் மாரியப்பன் (வயது 47) உள்பட 3 பேர் வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுத்துக் கொண்டு இருந்தனர். ஒரு ஓட்டுக்கு ரூ.1000 வீதம் என்று பணப்பட்டுவாடா செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.39 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி செல்வகுமார் களக்காடு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மேரிஜெமிதா இதுதொடர்பாக மாரியப்பன் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

இதேபோல் தேர்தல் பறக்கும் படை அதிகாரி ஆறுமுகபெருமாள் தலைமையிலான குழுவினர் பத்மநேரி பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்று போது, அதிகாரிகளை பார்த்ததும் 5 மர்ம நபர்கள் பணத்தை கீழே போட்டுவிட்டு தப்பி ஓடினார்கள். பின்னர் அதிகாரிகள் கீழே கிடந்த ரூ.50 ஆயிரத்தை கைப்பற்றினார்கள். அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக 5 பேரும் கொண்டு சென்றது தெரியவந்தது. இதுகுறித்து களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story