நடுக்கடலில், வலைகளை அறுத்தெறிந்து கர்நாடக மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல்


நடுக்கடலில், வலைகளை அறுத்தெறிந்து கர்நாடக மீனவர்கள் மீது சரமாரி தாக்குதல்
x
தினத்தந்தி 18 Oct 2019 4:59 AM IST (Updated: 18 Oct 2019 4:59 AM IST)
t-max-icont-min-icon

நடுக்கடலில் வலைகளை அறுத்தெறிந்து கர்நாடக மீனவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய மராட்டிய மீனவர்கள் பின்னர் விசைப்படகிற்கும் தீவைத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

உடுப்பி, 

கர்நாடகம் மற்றும் மராட்டியம் இடையே அடிக்கடி எல்லைப்பிரச்சினை இருந்து வருகிறது. பெலகாவி மாவட்டம் தங்களுக்குத்தான் சொந்த என்று கூறுவதுபோல் மராட்டிய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால்தான் கர்நாடக அரசு கடந்த சில வருடங்களாக சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரை பெலகாவியில் நடத்தி வருகிறது. பெலகாவியும் கர்நாடகத்திற்கு உட்பட்டதுதான் என்பதை அறிவுறுத்தவே அங்கு சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க கடல் பகுதியிலும் கர்நாடகம் - மராட்டியம் இடையே எல்லைப்பிரச்சினை இருந்து வருவது தற்போது வெளிச் சத்திற்கு வந்துள்ளது. உடுப்பி மாவட்டம் மல்பே கடற்கரையில் இருந்து அப்பகுதியைச் சேர்ந்த 7 மீனவர்கள் ஒரு விசைப்படகில் மீன்பிடிப்பதற்காக அரபிக்கடலுக்குள் சென்றனர்.

அவர்கள் மல்பே கடற்கரையில் இருந்து 12 நாட்டிக்கல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ஏராளமான விசைப்படகுகளில் வந்த 200 மராட்டிய மாநில மீனவர்கள், கர்நாடக மீனவர்களின் படகை சுற்றி வளைத்தனர். பின்னர் அவர்களில் சிலர் அத்துமீறி கர்நாடக மீனவர்களின் படகில் ஏறினர். பின்னர் அவர்கள் கர்நாடக மீனவர்களை சரமாரியாக தாக்கி அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அவர்களுடய வலைகளை அறுத்தெறிந்தனர். அதுமட்டுமல்லாமல் அவர்கள் பிடித்து வைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான மீன்கள், டீசல் கேன்கள், மீன்பிடிப்பதற்கான எந்திரங்கள், ஜி.பி.எஸ். கருவி ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டனர். மேலும் மீனவர்களை கடலில் தூக்கி போட்டுவிட்டு, படகிற்கும் தீவைத்தனர். பின்னர் அவர்கள் தங்களது படகில் ஏறி சென்றுவிட்டனர்.

இதற்கிடையே கடலுக்குள் மீன்பிடிக்க மற்றொரு படகில் சென்றிருந்த கர்நாடக மீனவர்கள், அங்கு விசைப்படகு தீப்பிடித்து எரிந்து கொண்டிருப்பதையும், மீனவர்கள் கடலில் தத்தளிப்பதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் மீனவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இச்சம்பவம் குறித்து மீனவர் ஒருவர் கூறுகையில், “கடந்த சில வருடங்களாகவே கடலில் கர்நாடக மீனவர்களுக்கும், மராட்டிய மாநில மீனவர் களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில மாதங் களுக்கு முன்பு மராட்டிய மாநில எல்லைக்கு உட்பட்ட மால்வான் கடல் பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த கர்நாடக மீனவர்கள் 7 பேரை, மராட்டிய மீனவர்கள் கொன்றுவிட்டனர். அதனால் தற்போது எல்லைப்பிரச்சினை தீவிரமடைந்துள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.


Next Story