அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு, ஒரு கட்டிலில் 3 நோயாளிகள் படுத்து இருந்ததை கண்டு சப்-கலெக்டர் அதிர்ச்சி
விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சப்-கலெக்டர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்குள்ள வார்டில் ஒரு கட்டிலில் 3 நோயாளிகள் படுத்திருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் உள்ள அரசு மருத்துவமனை சித்தா, மகப்பேறு, பொதுமருத்துவம், கண்சிகிச்சை, டயாலிசிஸ், சி.டி.ஸ்கேன், எலும்பு முறிவு, குழந்தைகள் நல மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுடன் இயங்கி வருகிறது. விருத்தாசலத்தை சுற்றியுள்ள 200-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள், இந்த மருத்துவமனையில்தான் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தவகையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த மருத்துவமனையால் பயனடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் விருத்தாசலத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள சப்-கலெக்டர் பிரவீன்குமார் நேற்று முன்தினம் மாலை திடீரென மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார்.
அப்போது பொது மருத்துவ பிரிவிலும், குழந்தைகள் நல மருத்துவ பிரிவிலும் ஒரு பெட்டில் 3 நோயாளிகள் படுத்திருந்தனர். சில நோயாளிகள் தரையில் படுத்திருந்தனர். இதை கண்டு சப்-கலெக்டர் பிரவீன்குமார் அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி தலைமை மருத்துவ அலுவலர் டாக்டர் எழிலிடம், அவர் கேட்டார். அதற்கு டாக்டர் எழில், அரசு மருத்துவமனையில் போதிய கட்டிட வசதி இல்லை. அதனால் ஒரு கட்டிலில் 3 பேரை படுக்க வைத்து சிகிச்சை அளிக்கிறோம் என்றார்.
அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிட வசதி கட்டுவது தொடர்பாக உயர் அதிகாரிகளிடம் தெரிவிப்பதாக சப்-கலெக்டர் பிரவீன்குமார் கூறினார். அதுவரையில் நோயாளிகளுக்கு மாற்று அறைகளில் படுக்கை வசதி ஏற்படுத்துவது குறித்து டாக்டர்களிடம் அவர் ஆலோசனை நடத்தினார். மேலும் பருவமழை தொடங்கி உள்ளதால் சளி, காய்ச்சல், தலைவலி, விஷபூச்சி கடித்தல் உள்ளிட்ட நோய்களுக்காக சிகிச்சை பெற மருத்துவமனைக்கு அதிகமானோர் வருவார்கள். அதற்கு தேவையான மருந்துகள் இருப்பில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவர், டாக்டர்களுக்கு அறிவுரை கூறினார்.
Related Tags :
Next Story