அ.தி.மு.க. அரசின் முயற்சியால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் - மன்னார்குடியில், ஜி.கே.வாசன் பேட்டி
அ.தி.மு.க. அரசின் முயற்சியால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மன்னார்குடியில் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
மன்னார்குடி,
அமைச்சர் காமராஜின் அண்ணன் சில நாட்களுக்கு முன் மரணமடைந்தார். அவரது குடும்பத்தினரை சந்தித்து, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் ஆறுதல் கூறினார். பின்னர் அவர் மன்னார்குடியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் மக்கள் நலன் காக்க அ.தி.மு.க. அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மக்கள் நல்வாழ்வு திட்டங்கள் நகரம் முதல் கிராமம் வரை சென்றடைந்து இருக்கிறது. அ.தி.மு.க. அரசின் மக்கள் நலப்பணிகளால் தற்போது நடைபெற உள்ள 2 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு அ.தி.மு.க. வெற்றி பெறும்.
உள்ளாட்சி தேர்தல் நடைபெற முடியாமல் இருப்பதற்கு தி.மு.க. தொடுத்த வழக்கு தான் காரணம். தற்போது அ.தி.மு.க. அரசின் முயற்சியால் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 5 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவித்திருப்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது அரசுக்கு உள்ள அக்கறையை காட்டுகிறது. 36 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்திற்கும், யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கி உள்ளது. இது இருபக்கமும் தமிழ் மக்களுக்கு இணைப்பு பாலமாகவும், சுற்றுலா வளர்ச்சிக்கும் பெரிதும் உதவும்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் உண்மையான நிலை விரைவில் வெளிவரும். தவறு செய்தவர்கள் மீது உறுதியான நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். சட்டப்பிரிவு 370-வது பிரிவை நீக்குவது குறித்து எதிர்ப்பு தெரிவித்த தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அரியானா மற்றும் மகாராஷ்டிரா மக்கள் சரியான பதிலடி கொடுப்பார்கள். பொருளாதார தேக்க நிலை என்பது இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள நிலையாகும். இதை மாற்றுவதற்கு மத்திய அரசு தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தமிழக விவசாயிகளை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்களையும் த.மா.கா. முழுவீச்சில் எதிர்க்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது திருவாரூர் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், சுரேஷ் மூப்பனார், மாநில பொதுக்குழு உறுப்பினர் சிங்கு பாண்டியன், மாவட்ட பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட இளைஞரணி தலைவர் சங்கர், முன்னாள் நகரசபை தலைவர் ராஜேந்திரன், மன்னார்குடி வட்டார தலைவர் முனியப்பன், நீடாமங்கலம் மேற்கு வட்டார தலைவர் சந்திரசேகரன், கிழக்கு வட்டார தலைவர் ராஜேந்திரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story