ஓட்டிப்பார்ப்பதாக கூறி நூதன முறையில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபர்


ஓட்டிப்பார்ப்பதாக கூறி நூதன முறையில் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற வாலிபர்
x
தினத்தந்தி 18 Oct 2019 9:45 PM GMT (Updated: 18 Oct 2019 7:08 PM GMT)

ஓட்டிப்பார்ப்பதாக கூறி நூதன முறையில் மோட்டார்சைக்கிளை திருடிச்சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஜான் (வயது 25). இவரது சகோதரர் எட்வர்டு (23). இருவரும் மோட்டார்சைக்கிள் உள்ளிட்ட இருசக்கர வாகனங்களை வாங்கி, விற்கும் தொழில் செய்து வருகின்றனர். மேலும் விற்பனைக்கு உள்ள வாகனங்கள் குறித்து ஆன்-லைனில் விளம்பரம் செய்து இருந்தனர்.

இந்த விளம்பரத்தை பார்த்துவிட்டு இவர்களது கடைக்கு வாலிபர் ஒருவர், ஆட்டோவில் வந்து இறங்கினார். கடையில் இருந்த எட்வர்டுவிடம், அங்கு விற்பனைக்கு நிறுத்தி இருந்த விலை உயர்ந்த மோட்டார்சைக்கிள் தனக்குபிடித்து இருப்பதாக கூறிய அவர், அதற்கு விலை பேசினார்.

அப்போது அவர், தான் வந்த ஆட்டோ டிரைவரிடம் தனக்காக பேரம்பேசி மோட்டார்சைக்கிளை குறைந்த விலைக்கு வாங்கி தரும்படி கேட்டார். அவரும், விலையை குறைத்து கொடுக்கும்படி கடைக்காரரிடம் பேரம் பேசினார்.

பின்னர் அந்த வாலிபர், தான் மோட்டார்சைக்கிளை ஓட்டிப் பார்க்க விரும்புவதாக கூறினார். அதை நம்பி, எட்வர்டுவும் அதற்கு சம்மதித்தார். இதையடுத்து கடையில் இருந்து மோட்டார்சைக்கிளை ஓட்டிச்சென்றார். அவருக்காக ஆட்டோ டிரைவர் கடையில் நின்றார்.

ஆனால் நீண்ட நேரம் ஆகியும் மோட்டார்சைக்கிளுடன் சென்றவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த எட்வர்டு, ஆட்டோ டிரைவரிடம் கேட்டார். அப்போது அவர், தனக்கு அந்த வாலிபர் யார் என்றே தெரியாது. ஆட்டோவில் சவாரி வந்ததாக தெரிவித்தார்.

அதன்பிறகுதான் அந்த வாலிபர், நூதன முறையில் மோட்டார்சைக்கிளை திருடிச் சென்று விட்டது தெரிந்தது. இதுபற்றி மடிப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து மர்ம வாலிபரை தேடி வருகின்றனர்.

Next Story