விடிய,விடிய கொட்டித்தீர்த்த கனமழை: மஞ்சூர் பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன


விடிய,விடிய கொட்டித்தீர்த்த கனமழை: மஞ்சூர் பகுதிகளில் வீடுகள் இடிந்து விழுந்தன
x
தினத்தந்தி 18 Oct 2019 11:00 PM GMT (Updated: 18 Oct 2019 7:13 PM GMT)

மஞ்சூர் பகுதிகளில் விடிய,விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் வீடுகள் இடிந்து விழுந்தன.

மஞ்சூர்,

மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மஞ்சூர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் சாலைகளில் மண்சரிந்து போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை விடிய,விடிய கொட்டித்தீர்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

மஞ்சூர் அருகில் உள்ள மாயாபஜார் பகுதியை சேர்ந்த எல்.ஐ.சி. ஏஜெண்டு கோபால கிருஷ்ணன் என்பவர் மனைவியுடன் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

திடீரென வீட்டிற்குள் பாறை உருண்டு வருவது போன்று சத்தம் கேட்டு மனைவியுடன் வீட்டை விட்டு அவர் வெளியேறினார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த வீடு இடிந்து விழுந்தது. இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இதே போன்று மஞ்சூர் அருகில் உள்ள எடக்காடு தலையட்டியை சேர்ந்த செவனன் என்பவரது வீட்டின் பின்புறத்தில் மண் சரிந்து வீட்டின் சுவர் முழுவதும் இடிந்த விழுந்ததுடன் வீட்டிற்குள் வெள்ளம் புகுந்தது.

மேலும் சிவசக்தி நகர், காமராஜர் நகர், உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 7 வீடுகள் இடிந்து விழுந்தன. இதுபற்றிய தகவல் அறிந்த குந்தா தாசில்தார் இடிந்த வீடுகளை பார்வையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Next Story