பண்ருட்டியில், சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
பண்ருட்டியில் சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை அரசியல் கட்சியினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பண்ருட்டி,
பண்ருட்டியில் சென்னை தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே விழுப்புரம்-மயிலாடுதுறை இடையே ரெயில்வே தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்டவாளத்தில் ரெயில்கள் செல்லும்போதெல்லாம் பண்ருட்டியில் ரெயில்வே கேட் மூடப்படும். அந்த சமயத்தில் சாலையின் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
இதனால் பண்ருட்டி நகர மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். மாணவ-மாணவிகளும் குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமல் சிரமமடைந்தனர். நகர மக்களின் கோரிக்கையை ஏற்று சுமார் ரூ.20 கோடி செலவில் ரெயில்வே கேட்டில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலம் கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு திறக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. ஆனால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்கவில்லை.
சர்வீஸ் ரோடு அமைப்பதில் அதிகாரிகள் முனைப்பு காட்டினர். சர்வீஸ் ரோட்டிற்கு தேவையான இடத்தை கையகப்படுத்தினர். ஆனால் அவர்களுக்கு இழப்பீடு வழங்குவதில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்ததால் பல மாதங்களாக கிடப்பில் போடப்பட்டது. இதன் காரணமாக மேம்பாலத்தின் இருபுறமும் குண்டும், குழியுமாக காட்சி அளித்தது.
பொதுமக்கள் அவதி அடைந்ததை கண்ட அதிகாரிகள், முதற்கட்டமாக சர்வீஸ் ரோட்டின் இருபுறமும் கழிவுநீர் வடிந்து செல்வதற்காக கால்வாய் கட்டினர். பின்னர் மின்கம்பங்கள் மாற்றி நடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ரோடு போடுவதற்கான நடவடிக்கைகளில் அதிகாரிகள் ஈடுபட்டனர். அதன்படி நேற்று முன்தினம் மாலை சர்வீஸ் ரோடு போடுவதற்கு தேவையான ஜல்லி கற்கள் லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு, ரத்தினம்பிள்ளை காய்கறி மார்க்கெட் எதிரே உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில் கொட்டப்பட்டன. அந்த ஜல்லி கற்களை சாலையில் நிரவி விடுவதற்கான பணி நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அப்போது அங்கு வந்த சில அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், சர்வீஸ் ரோடு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. கூடுதலாக இடம் கையகப்படுத்தி சர்வீஸ் ரோட்டை அகலமாக போட வேண்டும் என்று அரசியல் கட்சியினர் கூறினர். இதனால் சர்வீஸ் ரோட்டில் கொட்டப்பட்ட ஜல்லி கற்கள் நிரவி விடாமல் அப்படியே போட்டுவிட்டு அதிகாரிகளும், தொழிலாளர்களும் அங்கிருந்து சென்று விட்டனர். தற்போது அந்த வழியாக இருசக்கர வானங்கள் மற்றும் கார்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைகிறார்கள்.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், பண்ருட்டி மேம்பாலத்தின் கீழ் பகுதியில் சர்வீஸ் ரோடு அமைப்பதற்காக ஏற்கனவே இடம் கையகப்படுத்தப்பட்டு கழிவுநீர் கால்வாய் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்களும் மாற்றி நடப்பட்டுள்ளன. இடம் கையகப்படுத்தியபோது இடிக்கப்பட்ட வீடு, கடைகளை அதன் உரிமையாளர் தற்போது மாற்றி கட்டி உள்ளனர். இந்தநிலையில் சில அரசியல் கட்சியினர், சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்த வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆரம்ப காலத்திலேயே கூறி இருந்தால், அதற்கு தகுந்தார்போல நடவடிக்கை எடுத்திருக்கலாம். தற்போது சர்வீஸ் ரோட்டை அகலப்படுத்தி போடுவது என்பது சாத்தியமே இல்லை என்றார்.
சில அரசியல் கட்சியினரின் திடீர் கோரிக்கையால் என்ன செய்வது என்று தெரியாமல் அதிகாரிகள் திகைத்துப்போய் இருக்கிறார்கள். பண்ருட்டி சர்வீஸ் ரோடு அமைப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கலை மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நகர மக்களின் கோரிக்கையாகும்.
Related Tags :
Next Story