‘காய்ச்சல் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்’ - கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்


‘காய்ச்சல் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம்’ - கலெக்டர் ரத்னா அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 18 Oct 2019 10:45 PM GMT (Updated: 18 Oct 2019 9:38 PM GMT)

காய்ச்சல் வந்தால் டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் தாமாக மருந்துகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் ரத்னா அறிவுறித்தினார்.

அரியலூர், 

அரியலூர் மாவட்டத்தில் ஊராட்சி மற்றும் சுகாதாரத்துறையின் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட 10-வது வார்டு மற்றும் கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் தூய்மையான குடிநீர் வழங்கப்படுவதை கலெக்டர் ரத்னா நேரில் ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில், முதல்-அமைச்சர் உத்தரவிற்கிணங்க, அரியலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. மேலும் ஏ.டி.எஸ். கொசு நல்ல நீரில் உற்பத்தியாவதால் அனைத்து கிராம மற்றும் நகர்புற இடங்களில் அதை தடுக்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். அரசுத்துறை அதிகாரிகள் கள ஆய்வின் போது தனியார் பகுதிகளில் கொசு உற்பத்தி மூலங்கள் கண்டறியப்பட்டால், அபராதம் விதிக்கப்படும். ஊராட்சி பணியாளர்கள் கிராமப்புறங்களில் பார்வையிட்டு, தூய்மை பணியை மேற்கொள்ள வேண்டும். தூய்மை பணிகளை மேற்கொள்ளாத கிராம ஊராட்சி செயலாளர்கள் மீது மாவட்ட நிர்வாகத்தால் துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். பொதுமக்கள் காய்ச்சல் வந்தால் டாக்டர்களின் ஆலோசனை இல்லாமல் தாமாக மருந்துகள் வாங்கி உட்கொள்ள வேண்டாம் என்றார்.

ஆய்வின்போது திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் ஹேமசந்த் காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிச்சாமி, நகராட்சி ஆணையர் திருநாவுகரசு, தாசில்தார் கதிரவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலையரசன், அருளப்பன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.

Next Story