ஜனவரி மாதம் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் - ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி அறிவிப்பு
வருகிற ஜனவரியில் கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்தார்.
கரூர்,
கரூரில் நேற்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பனை மரத்தில் இருந்து இறக்கப்படும் கள் என்பது உணவின் ஒரு பகுதி. அது போதைப்பொருள் அல்ல. அரசு விவசாயிகளிடம் பாலை கொள்முதல் செய்து ஆவின் மூலமாக மக்களுக்கு வழங்கி வருவதைப்போல கள்ளையும் கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கிட வேண்டும். கள் போதைப்பொருள் என யாரேனும் நிரூபித்தால் ரூ.10 கோடி பரிசு தர கள் இயக்கம் தயாராக இருக்கிறது. ஆனால் அதற்கு அரசு உள்பட யாரும் முன்வரவில்லை. எனவே வருகிற ஜனவரி மாதம் 21-ந்தேதி முதல் இளைஞர்கள், இயற்கை ஆர்வலர்களை ஒன்றிணைத்து கள் இறக்கி சந்தைப்படுத்தும் போராட்டம் நடத்தப்படும். காவிரி பிரச்சினையில் தினந்தோறும் நீர் பங்கீடு என்கிற அம்சத்தை தீர்ப்பில் இடம்பெற செய்ய தமிழ்நாடு அரசு சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். நீரா பானம் இறக்கி விற்பனை செய்யும் திட்டத்தினை நிபந்தனைகளின்றி நடைமுறைப்படுத்த வேண்டும்.
சட்டமன்றம், பாராளுமன்றத்தில் எடுக்கப்படும் முடிவுகளே உள்ளாட்சி நிர்வாகத்தில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. மாறாக உள்ளாட்சியில் கொள்கை முடிவு ஏதும் எடுக்க முடியாது. எனவே கட்சி பாகுபாடின்றி அனைவரையும் சுயேச்சைகளாக போட்டியிட செய்வது உள்ளிட்ட திருத்தங்களை நமது அரசியல் சட்டத்தில் கொண்டுவர வேண்டும். மேலும் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி, தெருவிளக்கு வசதி போன்றவற்றிற்காக அரசு அலுவலகங்களுக்கு அடிக்கடி பொதுமக்கள் திரண்டு வருவதை தடுக்க அவர்கள் உள்ளாட்சி தேர்தலில் நல்லவர்களுக்கு வாக்களித்து உறுப்பினர்களாக தேர்ந் தெடுத்தால் ஜனநாயகம் வலுப்பெறும். ஊழல்வாதிகளுக்கு இடமில்லாமல் போகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story